5% இடஒதுக்கீடு தர வேண்டி முன்னாள் துணை ராணுவப் படையினர் கோரிக்கை!
வேலூர் மாவட்டம், வேலூர் கோட்டை சுற்றுச்சாலை, காவலர் மன்ற மண்டபத்தில் தமிழ்நாடு முன்னாள் மத்திய அரசு எல்லை பாதுகாப்பு படை, ஆயுதப்படை ராணுவப்படை துணை ராணுவ படைகள் சார்பில் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளில் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என முன்னாள் துணை ராணுவப்படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முன்னாள் மத்திய ஆயுத காவல்படை வீரர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மற்றும் கௌவுரவிப்பு விழா வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் (டிஎன்சிஎப் வாரா) விஜயகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தமிழரசன், பொருளாளர் பூரணசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் மனோகரன் வரவேற்றார். இதில் வேலூர் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், ஆர்டிஓ (பொறுப்பு) கலியமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். சத்தீஸ்கர் பகுதியில் வீரமரணமடைந்த பென்னாத்தூரைச் சேர்ந்த தேவன் என்பவரது குடும்பத்தினரை வரவழைத்து கௌரவித்தனர்.
ஜீவன் ரக்ஷா விருதுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் உமாசங்கர் என்பவரை பாராட்டினர். இந்த கூட்டத்தில் தமிழக துணை ராணுவப்படை வீரர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கு இடஒதுக்கீடு தரவேண்டும், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்களில் வீட்டுவரி, குழாய் வரி மற்றும் இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் மத்திய காவல்படை வீரர்களுக்கென 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த மத்திய காவல்படை வீரர்களுக்கென நலவாரியம் மற்றும் தனி அமைச்சகம் ஏற்பாடு செய்ய வேண்டும். மாதந்தோறும் குறைதீர்வு கூட்டம் நடத்த வேண்டும் என இவ்வாறு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.