ராஜபாளையம் அருகே நச்சாடைப் பேரி பகுதியில் மரங்களை ஒடித்து சேதப்படுத்தி வரும் ஏராளமான காட்டு யானைகள்.
ராஜபாளையம் அருகே தோப்புக்குள் புகுந்த காட்டு யானைகள் ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட மா மற்றும் பனை மரங்களை ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து அளிக்கப்படும் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல், வனத்துறை அதிகாரிகள் விவசாயிகளை அலட்சியப்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நச்சாடைப் பேரி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ளது. இதில் கேசவராஜா, முத்தையா மற்றும் அய்யனார் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் மா மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் மரங்களில் காய்கள் விளைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக இரவு நேரங்களில் வனப்பகுதிக்குள் இருந்து வரும் காட்டு யானைகள் நன்றாக விளைச்சல் கண்டிருக்கும் மரங்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
தற்போது வரை 30க்கும் மேற்பட்ட மா மரங்கள் மற்றும் ஒரு பனை மரத்தை வேருடன் ஒடித்து சேதப்படுத்தி உள்ளது. இதனால் மாமரத்தில் விளைந்து வந்த காய்கள் அனைத்தும் முழுமையான வளர்ச்சி பெறும் முன்னதாகவே, தரையில் விழுந்து சேதமாகி விட்டது.
மா சீசனில் ஒரு மரத்தில் இருந்து ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பழங்கள் விவசாயிகளுக்கு கிடைக்கும். தற்போது 30 மரங்கள் வரை சேதமாகி உள்ளதால் 3 லட்சம் வரை தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்காமல், தங்களை அலட்சியப்படுத்துவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். எனவே தங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வன விலங்குகள் விவசாய நிலத்திற்குள் வருவதை தடுக்க வனத்துறையினரும்,
சேதமான பயிர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ம.வெள்ளானை பாண்டியன் ராஜபாளையம்.