ராஜபாளையத்தில் இருந்து புண்ணிய யாத்திரை செல்லும் பயணிகளுக்கு மலர் தூவி வரவேற்பு

ராஜபாளையம் வழியாக காசிக்கு செல்லும் ரயிலை பிடிக்க வந்தவர்கள் ஆட்டோ விபத்தில் சிக்கி கால்வாயில் கவிழ்ந்தது. இதில் பெண் பலியான நிலையில், இருவர் படுகாயம் அடைந்தனர்.
இந்திய ரயில்வே சார்பில் கீழ் காசி, கயா உள்ளிட்ட புண்ணிய ஸ்தலங்களுக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மொத்தம் 800 பேர் பயணிக்கும் இந்த ரயிலில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து மட்டும் 220 பேர் செல்கின்றனர்.

தமிழகத்திலேயே அதிகம் பேர் செல்வதால், ரயில்வே துறை சார்பில் ராஜபாளையத்தில் இருந்து புண்ணிய யாத்திரை செல்லும் பயணிகளுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ரயில் பயனாளர்கள் சங்கம் சார்பில் காசி யாத்திரை செல்லும் பயணிகளுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த ரயிலில் பயணிப்பதற்காக ராஜபாளையம் அடுத்த முகவூரை சேர்ந்த பழனிநாதன், இவரது மகள் பூரண புஷ்பம் பதிவு செய்திருந்தனர். இதற்காக முகவூரில் இருந்து இன்று அதிகாலை 4 மணி அளவில் பேருந்து மூலம் ராஜபாளையம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அங்கிருந்து ஆட்டோ மூலம் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, மதுரையில் இருந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சங்கரன் கோயில் சாலையில் வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து, ஆட்டோ மீது மோதியுள்ளது.

மோதியதில் சாலையோரம் இருந்த கழிவு நீர் கால்வாயில் ஆட்டோ கவிழ்ந்தது. இதில் பூரண புஷ்பம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுனர் சாமிராஜ், பழனிநாதன் ஆகியோர் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தெற்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் ம.வெள்ளானைப்பாண்டியன்.