ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது; தொற்றுநோய் பரவும் அபாயம்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள கொடுக்கூர் கிராமத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்பாட்டில் இருந்து வரும் இந்த ஏரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்நாற்றம் கடுமையாக வீசியது.
இதனை அடுத்து கிராம மக்கள் குளத்தில் சென்று பார்த்தபோது மீன்கள் மர்மமான முறையில் செத்து மிதந்தது தெரியவந்தது. கடந்த ஒரு வார காலமாக சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் தொடர்புடைய அதிகாரிகளிடத்தில் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதில் அதிருப்தி அடைந்த அப்பகுதி கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்டனர்.
பின்னர் இது பற்றி தகவல் அறிந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணசாமி மற்றும் நிர்வாக அலுவலர் செல்வம், போலீசார் பொதுமக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடத்தில் மக்கள் தெரிவிக்கையில், கடந்த ஒரு வார காலமாக ஏரியில் மீன்கள் செத்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் தொற்றுநோய் பருவம் அபாயம் ஏற்பட்டுள்ளது. காற்றில் துர்நாற்றம் வீசுவதால் அதன் மூலம் நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது. எனவே மீன்கள் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், உடனடியாக இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என அதிகாரிகளிடத்தில் தெரிவித்தனர். பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.