7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் பேச்சு.

காஞ்சிபுரம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வரும் மே மாதம் 7 ஆம் தேதி சேலத்தில் இந்திய அளவிலான கூடைப்பந்துப் போட்டி நடைபெற இருப்பதாக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் சார்பில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் தலைமை வகித்தார்.
எம்எல்ஏ சி.வி.எம்.பி. எழிலரசன்,விளையாட்டு மேம்பாட்டு அணியின் துணை அமைப்பாளர்கள் வினோத்குமார், தினேஷ்,சாகுல்ஹமீது, சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அணியின் மாவட்ட அமைப்பாளர் சி.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.
விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசும்,வெற்றிக் கோப்பையும் பரிசாக வழங்கி விளையாட்டு மேம்பாட்டு அணியின் செயலாளரும்,முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன் பேசியது.
திமுகவில் பல்வேறு அணிகள் இருந்தாலும் இளைஞர்களை ஊக்குவிக்கவே உருவாக்கப்பட்டிருப்பது விளையாட்டு மேம்பாட்டு அணியாகும்.தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக விழுப்புரத்தில் கபடிப்போட்டியும்,கோவையில் மோட்டார் பைக் ரேஸ் போட்டியும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது.
வரும் மே மாதம் 7 ஆம் தேதி சேலத்தில் அகில இந்திய அளவில் கூடைப்பந்தாட்டப் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.விரைவில் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தமிழக வீரர்கள் பங்கு பெறும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தயாநிதி மாறன் பேசினார்.
விழாவில் காஞ்சிபுரம் ஒன்றியக்குழுவின் தலைவர் மலர்க்கொடி குமார்,திமுக மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார்,இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் யுவராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.