72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடப் போவதாகத் தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை.
72 மணி நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்காவிட்டால் கோட்டையை முற்றுகையிடப் போவதாகத் தமிழக அரசுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை.
பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைத்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 ரூபாய் 22 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 6 ரூபாய் 70 காசுகளும் குறைந்து விற்பனையாகிவருகிறது. இதனையடுத்து அந்தந்த மாநிலங்களில் வரி குறைப்பு செய்து மேலும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து, ‘பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, மத்திய அரசு ஒருபோதும் எந்த மாநிலங்களிடமும் கலந்தாலோசிக்கவில்லை. இந்த நிலையில் மாநிலங்கள் தங்கள் வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயம் இல்லை’ என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டார். இப்படி மத்திய – மாநில அரசுகள் இவ்விஷயத்தில் முரண்பட்டிருக்கும் நிலையில் அண்ணாமலையும் இந்த விவகாரத்தில் புகுந்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. கடந்த 6 மாதங்களில் பெட்ரோல் விலையை 14 ரூபாய், டீசல் விலையை 17 ரூபாய் குறைத்துள்ளது. இதனால்1 லட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகச் சொல்லியிருந்தது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னதை இந்த அரசு செய்ய வேண்டும். 72 மணி நேரத்தில் சொன்னதைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் கோட்டையை முற்றுகையிடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.