
தென்காசி மாவட்டம், தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட தினசரி காய்கறிகள் சந்தை வியாபாரிகள் நகராட்சி மூலம் கட்டப்பட்டுள்ள புதிய கடைகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய கோரி காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் தங்களது காய்கறிகளை சாலையில் கொட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி தினசரி சந்தை காய்கனி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.வெங்கடேஷ் தலைமையில், செயலாளர் டி.எஸ் .பாண்டியன், பொருளாளர் எல்.நாராயணன் துணைத் தலைவர் சி.ஆர். சுடலைகனி, துணை செயலாளர் எம்.தாவூத் மைதீன் துணைப் பொருளாளர் பி.டி. சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
அப்போது சங்கத்தின் தலைவர் ஜி.வெங்கடேஷ் கூறியதாவது;-
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட தென்காசி தினசரி காய்கனி சந்தையில் வியாபாரிகள் சுமார் 40 வருட காலமாக தினசரி குத்தகை செலுத்தி 120 கடைகளை நடத்தி வியாபாரம் செய்து வருகின்றோம்.
கடந்த 08.11.2023 அன்று அரசு வெளியிட்ட அரசாணை எண்.G.O.(4D) No.45 ன் படி பழைய மார்க்கெட் கடைகளை இடித்து புதிய மார்க்கெட் கட்டும் பணிகளுக்கான ஆணை வெளியிடப்பட்டது.
அந்த சமயத்தில் தென்காசி நகராட்சி ஆணையாளர் தினசரி சந்தையில் உள்ள காய்கனி வியாபாரிகள் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நகர்மன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள்.
அந்த கூட்டத்தில் எங்களுடைய வியாபாரம், மற்றும் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் மாற்று இடத்தில் வணிகம் செய்வதற்கு தென்காசி நகர்மன்ற தலைவரிடம் கோரிக்கை விடுத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று எங்களுக்கு தென்காசி சேர்மன் ஆர்.சாதிர், தென்காசி நகராட்சி ஆணையாளர் இருவரும் நாங்கள் தொடர்ந்து வியாபாரம் பார்ப்பதற்கு
வசதியாக அருகில் உள்ள தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பூங்கா வளாகத்தில் 100 கடைகளை அமைத்து தொடர்ந்து வியாபாரம் செய்து வர ஏற்பாடு செய்து தந்தார்கள்.
அதில் நாங்கள் 01.03.2024 அன்று கடைகள் கிடைக்கப் பெற்று நகராட்சி ஆணையாளர் வழங்கும் காய்கனி வியாபாரத்திற்கு உரிய வணிக உரிமம் பெற்று மேலும் உணவு மற்றும் பாதுகாப்பு சான்று பெற்று, தொழில் வரி செலுத்தி காய்கனி வியாபாரம் செய்து வருகிறோம். மேற்படி தற்காலிக கடைகளுக்கு தென்காசி நகராட்சி ஆணையாளர் பெயரில் உள்ள ஒரு மின் இணைப்பில் மொத்த வியாபாரிகளும் மின் இணைப்பை பயன்படுத்தி அதற்கு மொத்தமாக மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். மேற்படி தற்காலிக கடைகளுக்கு நகராட்சிக்கு நேரடியாக வாடகை செலுத்தி வருகிறோம். மேற்படி கடைகளுக்கு கதவுகள் உள்வேலைகள் பார்ப்பதற்கு ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்து காய்கனி வியாபாரம் செய்து வருகிறோம்.
புளியங்குடி நகராட்சி மற்றும் பாளையங்கோட்டை மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட காய்கனி சந்தையில் உள்ள காய்கனி வியாபாரிகளுக்கு இது போன்ற சூழ்நிலையில் பழைய மார்க்கெட் கடைகளை இடித்து புதிய மார்க்கெட்டில் உள்ள கடைகளை ஏற்கனவே வியாபாரம் செய்து வந்த காய்கனி வியாபாரிகளுக்கே புளியங்குடி நகராட்சி, பாளையங்கோட்டை மாநகராட்சி நிர்வாகம் கொடுத்துள்ளது. 01.10.2025 ம் தேதி தென்காசி நகராட்சியில் இருந்து ஏலம் மற்றும் ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பு என்ற நோட்டீஸ் பத்திரிக்கை செய்தி தாளில் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் சிறு வியாபாரிகளாகிய எங்களுக்கு, பெரும் பணக்காரர்களிடம் போட்டியிடும் சூழ்நிலையும், அதனால் எங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தொழில் நடத்துவதற்கு கடைகள் கிடைக்காத சூழ்நிலையும் ஏற்படும் என்கின்ற அச்சத்தில் வியாபாரிகள் அனைவரும் உள்ளோம். இதனால் சிறு வியாபாரிகளாகிய நாங்கள் வேறு வழியின்றி பொது ஏலம் ரத்து செய்யும் வரை எங்கள் கடைகளை 07.10.2025ம் தேதியில் இருந்து கால வரையரையற்ற கடை அடைப்பு போராட்டம் நடத்துகிறோம்.
தமிழ்நாடு முதலமைச்சர் தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட புதிய மார்க்கெட்டில் உள்ள கடைகளை நெடுங்காலமாக காய்கனி வியாபாரம் செய்து வரும் காய்கனி வியாபாரிகளாகிய எங்களுக்கு அரசு அதிகாரிகளால் நிர்ணயிக்கப்படும் மேலும் தென்காசி நகராட்சி தினசரி சந்தையில் புதிய கட்டிடத்தில் உள்ள கடைகளை பொது ஏலம் தவிர்த்து, நியாயமான மாத வாடகைக்கும், நியாயமான முன் தொகைக்கும், எங்களுடன் புரிந்துணர்வு செய்து தென்காசி நகராட்சியில் காய்கனி வியாபாரிகளாகிய எங்களின் வாழ்வாதாரம் பாதிப்பு அடையாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுத்து உதவிடுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கெள்கிறோம்.
இந்தக் கோரிக்கை மனுவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ் பழனி நாடார், தென்காசி நகர் மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கும் அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கடையடைப்பு நிகழ்ச்சியின் போது தினசரி சந்தைக்கு காய்கறிகள் கொண்டு வந்த விவசாயிகள் தங்கள் காய்கறிகளை சாலையில் கொட்டி கண்ணீர் மல்க கோஷமிட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் பி எம் முருகேசன் வீ பொண்ணுக்குளி கே.பி.எம் கோமதிநாயகம், முப்புடாதி கனி, கே.கேமுருகன், பி.மாரிமுத்து, ஜி.குமார், சி.அருணாசலம், வேல்முருகன், ராமகிருஷ்ணன், ராமசாமி, சாகுல் ஹமீது, முகமது சுபஹானி, திவான் மீரா பிள்ளை, உட்பட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி தினசரி சந்தை காய்கற வியாபாரிகள் சங்கத்தின்தலைவர் ஜி. வெங்கடேஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.