தலைப்பு செய்திகள்
விசாரணைக்கு அழைத்த அமலாக்கத்துறை… உயிரை மாய்த்த பாமக வழக்கறிஞர்.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த திருவேற்காடு, சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் (31). பாமகவில் திருவேற்காடு பகுதி அமைப்பு செயலாளராக இருந்து வந்த கோபிநாத் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக, டி.டி.வி.தினகரன் தரப்பு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் லஞ்சம் கொடுத்த வழக்கில் டி.டி.வி.தினகரன் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட சுகேஷ்சந்திரகர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து டெல்லியை சேர்ந்த தொழிலதிபரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லி அமலாக்கத்துறையினர் சுகேஷை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சுகேஷ் பல மோசடியில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து சுகேஷ் சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தியது. மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் கோபிநாத், ராமாபுரத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை குற்றவாளியாக சேர்த்து நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
