அரசு மீதான மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.. துறை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!
![அரசு மீதான மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.. துறை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!! அரசு மீதான மாற்றுத்திறனாளிகளின் நம்பிக்கையை காப்பாற்றுங்கள்.. துறை அதிகாரிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-06-at-4.28.15-PM.jpeg)
மாற்றுத் திறனாளிகள் நல துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரை அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் நல துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரை அனைவரும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, இந்தியாவிலேயே முதன்முறையாக மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காகத் தனித் துறையை உருவாக்கியவர் கலைஞர். உருவாக்கினது மட்டுமல்ல, தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்து பல்வேறு திட்டங்களை அதற்காக உருவாக்கித் தந்திருக்கிறார். அந்த வகையில் இன்னும் சிறப்பு கவனம் எடுத்து, நாம் நல்ல முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறோம். இந்த ஆட்சி அமைந்த போது கொரோனா என்ற பெருந்தொற்று பரவி இருந்தது. அந்தச் சூழலில், மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி போடுவதற்காக தடுப்பூசி மையங்களில் தனியாக ஒரு பிரிவு, தனி வரிசை, சாய்வுதள வசதி உருவாக்கி தடுப்பூசி முகாம்களை நடத்தியிருக்கிறோம். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், வீட்டிற்கே சென்று தடுப்பூசியைச் செலுத்தி, கொரோனா பெருந்தொற்று நேரத்தில் இந்த அரசு மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல், அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவித்தோம். அவர்களுக்கு உயர் கல்வி நம்பிக்கையை ஏற்படுத்தித் தந்திருக்கிறோம்.
கொரோனா தொற்று நேரத்தில், மாற்று திறனாளிகளின் வீட்டிற்கே சென்று அத்தியாவசியப் பொருட்களையெல்லாம் வழங்கியிருக்கிறோம். அரசினுடைய ரிக்கார்டுகளில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமன்றி, பதிவு செய்யப்படாத மாற்று திறனாளிகளுக்கும் வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்திய அரசுதான் இந்த அரசு. இதனுடைய தொடர்ச்சியாக இந்த ஓராண்டு காலத்தில், எத்தனையோ அரிய பணிகள் மாற்றுத்திறனாளிகளின் நன்மைக்காக நாம் செய்து கொண்டிருக்கிறோம். உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்த காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூபாய் 62 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என நான் அறிவிப்பு செய்தேன். 70 கோடியே 76 லட்சம் ரூபாயில், 37,660 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூபாய் 360 கோடியே 21 லட்சம் அளவுக்கு 2,11,505 பயனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில அளவிலான விருதும் வழங்கப்படுகிறது. தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்கான மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில், ரூபாய் 1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. இப்படி ஓராண்டில், மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திட பல்வேறு நலத்திட்டங்களை நாம் அறிவித்து இருக்கிறோம்.
தலைவர் கலைஞர் அவர்கள் தமிழகத்தினுடைய முதலமைச்சராக இருந்தபோது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்னுடைய கையில் வைத்துக்கொண்டு எவ்வாறு பணியாற்றினாரோ, அதே வழியில் நின்று, இன்றைக்கு நானும், இந்த அரசும் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பான சேவை வழங்கியமைக்காக, தமிழ்நாடு முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினமான 03.12.2021 அன்று தமிழ்நாடு அரசுக்கு விருது வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு வழங்கிய வகையில் இந்தியாவிலேயே சேலம் மாவட்டம் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஸ்கூட்டர் கொடுத்தோம், கருவிகளைக் கொடுத்தோம், நிதி கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அந்த அளவுக்கு இந்தத் துறை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவது சாதாரணமான காரியம் அல்ல, அதற்கு இந்தத் துறையில் பணியாற்றக்கூடிய அதிகாரிகள் முதல் சாதாரண அலுவலர் வரைக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். துறையை நோக்கி வருபவர்கள் சிலர் தான். அந்த சிலரது கோரிக்கைகளை செவி மடுத்துக் கேட்க வேண்டும். உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றித் தர வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அதிகாரிகளும், அலுவலர்களும் தான் காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்தார்.