BREAKING NEWS

குழந்தைகளைக் கொண்டாடுங்கள், அவர்கள் குழந்தைத்தனத்தைத் திருடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

குழந்தைகளைக் கொண்டாடுங்கள், அவர்கள் குழந்தைத்தனத்தைத் திருடாதீர்கள்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமான அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு ‘ குழந்தைகளைக் கொண்டாடுங்கள், அவர்கள் குழந்தைத்தனத்தைத் திருடாதீர்கள்’ என உருக்கமாக செய்தியை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குழந்தைகள் கால் முளைத்த கவிதைகள். குழந்தைப் பருவம் விளையாடி மகிழும் இனிய பருவம், துள்ளித் திரிந்து, பட்டாம்பூச்சிகளைப் போலச் சிறகடித்துப் பறந்து மகிழும் குழந்தைப் பருவத்தில், பள்ளிக்குச் சென்று துள்ளி விளையாடவும், கல்வி பயிலவும், உடன் பயிலும் மாணவர்களோடு கதை பேசி களிக்கவும் முடிந்தால்தான் குழந்தைப் பருவம் முற்று பெறும். குழந்தைப் பருவத்திலே அவர்களை வேலைக்குச் செல்லப் பணித்து, சொற்ப தொகைக்காக அவர்களின் பொன்னான எதிர் காலத்தை பாழ்படுத்தி அவர்களின் குழந்தைத் தனத்தைத் திருடுவது ஒரு தீவிர சமூகக் குற்றமாகும். வனத்தில் வளர வேண்டிய தேக்கு மரத்தைத் தொட்டியில் வளர்ப்பதை போல அவர்களது சிறகுகளைக் கத்தரித்து, சுதந்திரத்தைப் பறித்து, குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் அளவற்ற ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றலைக் கல்வியின் மூலமாகவும், மற்றவர்களோடு பழகி கற்றுக் கொள்வதன் மூலமாகவும் முழுமையாக உணரும்போதுதான், மானுடத்திற்கு மகத்தான கடமைகளை ஆற்ற முடியும். குழந்தைத் தொழிலாளர் முறை என்பது அனைத்து வகைகளிலும் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கி அவர்களின் வியர்வையைச் சுரண்டி சிலர் வளம் பெறுவதற்கு எதிராக விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்த உலகம் முழுவதும் குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் ஜூன் 12-ம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு குழந்தையும் பாதுகாப்பு உரிமை, கல்வி உரிமை, வாழும் உரிமை ஆகியவற்றைப் பெற்றுத் திறம்பட உயர்ந்து வாழ்க்கையில் வளம் பெற வேண்டும். அந்த உரிமைகளைப் பறிப்பது இயற்கை நியதிக்கு மட்டுமல்ல; சமூக நீதிக்கும் எதிரானது ” எனத் தெரிவித்துள்ளார்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )