தூத்துக்குடி அருகே முள்ளக்காட்டில் ரவுடி பழிக்கு பழியாக குத்திக் கொலை.

தூத்துக்குடி அருகே முள்ளக்காடு திருமாஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் மகன் அலெக்ஸ் (எ) சில்லி (25). இவரும் தேவிநகரை சேர்ந்த மகேஷ் என்பவரும் இன்று மாலை மகேஷ் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளனர். அப்போது மகேஷ், அலெக்ஸ் (எ) சில்லி-யை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இது குறித்து முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அலெக்ஸின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் படலம் தொடங்கியது.
தொடர்ந்து முத்தையாபுரம் ஆய்வாளர் ஜெயசீலன் உட்பட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அலெக்ஸ் (எ) சில்லி கடந்த ஜனவரி மாதம், மகேஷின் அண்ணன் ரமேஷை கத்தியால் குத்தினாராம். அதற்கு பழிக்கு பழியாக மகேஷ், அலெக்ஸ் (எ) சில்லியை குத்தி கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் (எ) சில்லி மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 2 கொலை முயற்சி வழக்குகள் உட்பட 5 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.