அமைச்சர் நேரு மீது கடும் விமர்சனம்; காவல்துறையில் அடுத்தடுத்து புகார்: கைதாவாரா திருச்சி சிவா மகன்?

திமுகவின் முக்கிய பிரமுகரான திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் மாநில ஓபிசி பிரிவு செயலாளருமான சூர்யா சிவா மீது திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.
அதில், “ஏற்கெனவே தன்னிடம் பணியாற்றிய கார் ஓட்டுநருக்கு முறையான சம்பளம் வழங்காமல் இருந்ததாகவும், அதை கேட்கச்சென்றவரை கொலை செய்ய முயற்சி செய்ததாகவும் சூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் இப்படி சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசியிருப்பது சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இருக்கின்றது. எனவே, பாஜக பிரமுகர் சூர்யா சிவா மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களைத் தொடர்ந்து சமூக நீதி பேரவை அமைப்பின் சார்பிலும் சூர்யா மீது மத்திய மண்டல காவல்துறை தலைவரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், “சூர்யா சிவா மதக் கலவரத்தை தூண்டும் விதமாக தொடர்ந்து சர்ச்சைக்குரிய பேச்சாலும் செயல்பாடுகளாலும் மற்றவர்களை தூண்டி விடுவதாக குற்றம்சாட்டி அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனால் திருச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சூர்யா சிவா மீது ஏற்கெனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இன்று மேலும் இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது சூர்யாவுக்கான நெருக்கடியை அதிகரித்துள்ளது.