ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து வருகிற 30 தேதி மாநிலம் தழுவிய மறியல் போராட்டம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட குழு கூட்டம் டி.கண்ணகி தலைமையில் கும்பகோணத்தில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மாநில மாநாட்டின் முடிவுகள் குறித்து மாவட்டச் செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார்.
எதிர்கால கடமைகள் மற்றும் மறியல் போராட்ட தயாரிப்பு குறித்து ஏஐடியூசி மாவட்டச் செயலாளர் ஆர்.தில்லைவனம் உரையாற்றினார்
விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சாமு.தர்மராஜன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-
அத்தியாவசிய பண்டங்களின் கடுமையாக விலை உயர்வை கட்டுப்படுத்து. மருந்து பொருட்கள் மீதான 10 சதவீத விலை உயர்வை உடனே கைவிடவேண்டும்.
அரிசி, மாவு, தயிர், வெண்ணெய், நெய் போன்ற உணவுப் பொருட்கள், ஈமச்சடங்கு செய்யும் மயானச் செலவினம், கைத்தறி மற்றும் அதன் மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய
வேண்டும்.
ஜிஎஸ்டி வரி விதிப்பு இழப்பீட்டு தொகை உட்பட தமிழகத்திற்கு தர வேண்டிய நிதி முழுவதையும் உடனடியாக வழங்க வேண்டும்.
கடந்த 2014 முதல் பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து உயர்த்தி மக்களிடமிருந்து பெற்ற ரூ.27 லட்சம் கோடியை மக்களிடமே திருப்பி வழங்கு. பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.50/- மற்றும் ரூ.40/- என வழங்கும் வகையில் வரிகளை குறைத்திட வேண்டும்.
அம்பானி, அதானி உள்ளிட்ட குழும நிறுவனங்களின் பெரும் செல்வக்குவிப்பை தடுத்து நிறுத்து. வேலை இழப்பு மற்றும் வருமானக் குறைவில் இருந்து ஏழை மக்களை பாதுகாத்திட வேண்டும்.
மின் விநியோகத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்க வழி செய்யும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிட வேண்டும்.
எல்ஐசி, ஸ்டீல், ஏர் இந்தியா, நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம், சாலை மற்றும் நீர்வழி போக்குவரத்து உள்ளிட்ட பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் தேசிய பணமாக்கள் திட்டத்தை கைவிட வேண்டும்.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து. வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்தி குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600/- வழங்கிட வழி செய்ய வேண்டும்.
தொழிலாளர்களின் வேலை நிரந்தரம், சம்பள உத்தரவாதம், போனஸ், பணிக் கொடை, ஓய்வூதியம் உள்ளிட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.
பொதுக் கல்வி கட்டமைப்பை சீர்குலைக்கும் தேசிய கல்விக் கொள்கை – 2020-ஜ முழுமையாக கைவிடவேண்டும்.
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வருகிற 30ம் தேதி அன்று கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், அம்மாபேட்டை, திருவையாறு, பூதலூர் உள்ளிட்ட மையங்களில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என மாவட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
