தஞ்சாவூர் கீழ ராஜவீதி சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர். பிரபாகர் பத்திரிகைகளுக்கு அளிக்கும் செய்தி.
தஞ்சாவூர் மாநகரத்தில் மேல ராஜவீதி , கீழராஜவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என மாநகரத்தில் பிரதான 4 வீதிகளிலும் தஞ்சாவூர் மாநகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி வெகு துரித நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால் தெருக்களின் இருபுறமும் ஓரங்களில் சாக்கடை வடிகால்க் சரிவர சீர் செய்யப்படாமல் அப்படியே போடப்பட்டது.
மழைக்காலம் வருவதற்குள் இந்த சாக்கடை வடிகால் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை அளிக்கப்பட்டது . தற்போது பருவ மழை முன்கூட்டியே பெய்து வருவதால் மழைநீர் சாக்கடை நீருடன் கலந்து தெருக்களில் தான் ஓடுகிறது.
தற்போது ஒரு வார காலமாக கீழ ராஜ வீதி சாக்கடை வடிகாலை சீர்படுத்துகிறோம் என்ற பெயரில் தெருக்களிலேயே மலஜலம் உள்ளிட்ட அசுத்தமான சாக்கடை நீர் சாலைகளிலே பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் , நடந்து செல்கின்றவர்கள் மிகவும் பெரும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

தற்போது தஞ்சை மாநகரத்தில் டெங்கு காய்ச்சல் ,புளு காய்ச்சல், மலேரியா காய்ச்சல் ,மர்ம காய்ச்சல், இன்புளுயன்சா காய்ச்சல் என பலவகையான காய்ச்சல்கள் அதிகமாக வருகின்றன. மருத்துவமனை படுக்கைகள் நிரம்பி வருகின்றன.
இந்த நிலையில் கீழ ராஜவீதி முழுவதுமாக சாக்கடை நீர் ஓடுவதால் அசுத்தமாகி, அசிங்கமாகி, துர்நாற்றம் வீசி பெரும் தொற்று ஏற்படுத்துகின்ற சூழ்நிலைமையை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
உடனடியாக கீழ ராஜவீதி மட்டுமல்லாது மற்ற வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட சாக்கடை வடிகால்களை போர்க்கால அடிப்படையில் துரிதமாக முடித்திட மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று மாநகரச் செயலாளர் ஆர்.பிரபாகர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
