வாழப்பாடி அருகே கார் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து: 6 பேர் படுகாயம்..
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே முத்தம்பட்டியில் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார், நிலை தடுமாறி, கட்டுப்பாடு இழந்து சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவிரிநகர் பகுதியில் சேர்ந்தவர் லட்சுமிபதி (52). இவரது மனைவி ஜெயசுதா (42). இத்தம்பதியர் மகள் அனுஸ்ரீ (18). மகன் திருப்புகழ் (11). உறவினர் நாராயணன் ஆகியோருடன், இன்று அதிகாலை போச்சம்பள்ளியில் இருந்து வாழப்பாடி வழியாக சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூர் நோக்கி காரில் சென்றுள்ளனர். இந்த காரை அதே பகுதியைச் சேர்ந்த ஓம்சக்தி (28) என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி கட்டுப்பாடு இழந்து, சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லட்சுமிபதி, ஜெயசுதா, திருப்புகழ் அனுஸ்ரீ, கார் ஓட்டுநர் ஓம்சக்தி மற்றும் இவர்களோடு பயணித்த நாராயணன் ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்தனர்.
காருக்கு அடியில் சிக்கி தவித்த இவர்களது அலறல் சத்தம் கேட்ட இப்பகுதி பொதுமக்களும், பயணிகளும் இணைந்து காருக்கு அடியில் சிக்கித் தவித்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.