விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார்.
கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் அருகே வேட்டைக்குடி பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். விவசாய தொழிலாளியான இவர் 25.07.2018 ஆம் ஆண்டு தனியார் நிதி நிறுவனம் மூலம் டிவிஎஸ் அப்பாச்சி 160 என்ற இருசக்கர வாகனத்தை வாங்கியுள்ளார்.
TN.91 T 1143 என்று பதிவு கொண்ட அந்த சிவப்பு கலர் அப்பாச்சி வாகனத்தை கடந்த 10.12.2021 ஆம் தேதி இரவு தனது சகோதரர் வீட்டில் நிறுத்திவிட்டு சென்று உள்ளார்.
இந்நிலையில் மறுநாள் அதிகாலை வந்து பார்த்த பொழுது தனது இரு சக்கர வாகனத்தை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்து அதற்கான ரசீதையும் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் அவரின் தொலைபேசி எண்ணுக்கு, தங்கள் சாலையில் செல்லும்போது தலைக்கவசம் அணியவில்லை, எனவே அதற்கு 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என நாகப்பட்டினம் போலீசார் குறுஞ்செய்தி அனுப்பி உள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது இருசக்கர வாகனம் தொலைந்து போய் ஓராண்டுக்கு மேல் ஆகிறது. இந்நிலையில் இந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், இந்த தகவல் மூலம் நாகப்பட்டினம் சென்று பார்த்த பொழுது வாய்மேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்யும் காவலர் அந்த வாகனத்தை வைத்துக் கொண்டு இருப்பதும், குடும்பத்துடன் பயணிப்பதையும் கண்டு அதிர்ச்சடைந்தார்.
மேலும் அவர் காவலர் என்பதால் பயந்து, தனது இருசக்கர வாகனம் குறித்து அவரிடம் எதுவும் கேட்கவில்லை. மேலும் காவலர் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தையும், அவர் குடும்பத்துடன் சொல்லும் புகைப்படத்தையும் எடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை ஆதாரமாக வைத்துக் கொண்டு தஞ்சை சரக காவல்துறை தலைவர் கயல்விழியிடம் புகார் அளித்துள்ளார்.
காணாமல் போன தனது வாகனத்தை மீட்டு தர வேண்டும், திருடி சென்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருட்டு வாகனத்தை வைத்திருந்த காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.