தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப அவர்கள் தலைமையில் கிராம அளவில் பேரிடர் முதல் நிலை மீட்பாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஒரு நாள் பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெறுகிறது.
இப்பயிற்சியினை இன்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. ரங்கராஜன் அவர்கள் துவக்கி வைத்து முதல் நிலை மீட்பாளர்களுக்கு கையேடு வழங்கினார்.
பேரிடர் காலங்களில் கடலோர மாவட்டங்களில் பேரிடர்களை குறைத்திடும் வகையில் கிராம அளவில் திறன் மேம்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை உத்தரவின் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 910 கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தி தலா 5 முதல் நிலை மீட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 4500 முதல் நிலை மீட்பாளர்களின் பெயர்கள் TNSMART இணையதளத்தில் பதிவு செய்து சமூக பேரிடர் மீட்பு படை உருவாக்கப்பட்டது. இவர்களுக்கு கிராம அளவில் அரை நாள் அறிமுக வகுப்பும், சரக அளவில் ஒரு நாள் அடிப்படை பயிற்சியும், கோட்ட அளவில் ஒருநாள் மீட்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.
இதனில் சிறந்த 600 முதல் நிலை மீட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு மாவட்ட அளவில் ஒரு நாள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் பேரிடர் மீட்பு பயிற்சி, கிராம பேரிடர் மேலாண்மை திட்டம் வகுத்தல் மற்றும் பணிக்குழுக்களுடனான ஒருங்கிணைப்பு குறித்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இப்பயிற்சியில் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் தாலுகாவை சேர்ந்த தலா 50 நபர்களும், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தாலுகாவை சேர்ந்த தலா 100 நபர்களும் பங்கேற்கின்றனர். 24.11.22 முதல் 04.12.22 வரை தொடர்ந்து ஒவ்வொரு தாலுக்கா அடிப்படையில் இப்பயிற்சி தஞ்சை ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.
இந்நிகழ்வில் மாவட்ட பேரிடர் வட்டாட்சியர் திருமதி. ராஜேஸ்வரி, ரெட்கிராஸ் துணை சேர்மன் திரு. ராகவேந்திரன், பொருளாளர் திரு. முத்துக்குமார், நிதி குழு சேர்மன் திரு. ஜெயக்குமார், துணை கிளை சேர்மன் திரு. சேக் நாசர், பேரிடர் பயிற்றுநர்கள் திரு. சுரேஷ் குமார், திரு. பயோகேர் முத்துக்குமார், திரு. துரை மாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.