பாபநாசம் அருகே கவனிப்பாரற்ற நிலையில் 1200 ஆண்டு பழைமையான ஸ்ரீரெங்கநாதர் கோயில்.

கோயில் திருப்பணிகள் முடிய அரசு முழுமையான உதவிகள் செய்ய வேண்டும் கிராமவாசிகள் கோரிக்கை…
தஞ்சாவூர் மாவட்டத்தில், பாபநாசம் தாலுக்கா, சாலியமங்கலம் அருகே திருபுவனம் என்ற ஊரில் ஸ்ரீரங்கநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பக்தர்களால் இது சின்ன ஸ்ரீரங்கம் சின்ன திருவரங்கம் என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இவ்வூர் புத்தூர் நாச்சியார் விண்ணகரம், திருபுவனவீரபுரம், விக்கிரம சோழ விண்ணகரம் என்றெல்லாம் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.
இங்குள்ள ஸ்ரீரங்கநாதர்ஆலயம் சுமார் 1200 ஆண்டுக்கு முன்பு மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது ஆகும்.
பிற்கால சோழர் பரம்பரையை தோற்றுவித்த சோழ மன்னனாகிய விஜயாலய சோழனின் பேரன் ஆதித்திய சோழன் மகன் பராந்தக சோழனால் புத்தூர் நாச்சியார் விண்ணகரம் தனி நாடாக தோற்றுவிக்கப்பட்டு கிபி 817 ஆம் ஆண்டு 850 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யப்பட்டது.
மேலும் சோழ பேரரசன் இராஜராஜன் தனது சகோதரிக்கு வழங்கிய ஏழு நாடுகளில் நடுநாயகமாக இந்த ஊர் இருந்திருக்கிறது.
சோழர் காலத்தில் 400ஏக்கர் பரப்பளவில் ஒரு ஏரி வெட்டப்பட்டு இந்த ஆலயத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் பல நூறு ஏக்கர் நிலங்களும் இந்த கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்டிருக்கிறது. 1960ஆம் ஆண்டு மே மாதம் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சரஸ்வதி மஹால் தொல்பொருள் ஆய்வாளர்கள் அரங்கநாத பெருமாள் கோயில் கல்வெட்டுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது 9 அடி அளவில் படுக்கை கோலத்தில் பெருமாள்,நான்கடி அளவில் அமர்ந்த கோலத்தில் சீனிவாச பெருமாள் சிலை, இரண்டரை அடி உயரத்தில் லட்சுமி நரசிம்மர், ராமபிரான், சீதாபிராட்டியார் திருமேனிகளும். ராமானுஜர், திருமங்கையாழ்வார். கூரத்தாழ்வார், திருமேனிகளும். சக்கரத்தாழ்வார் பீடமும்,விஷ்வக்சேனர் திருமேனியும் கண்டெடுக்கப்பட்டன.
மேலும் 2013 ம்ஆண்டு அரசின் ஒப்புதலோடு இவ்வாலய திருப்பணி தொடங்கப்பட்டன. அப்போது அடித்தளம் தோண்டயபோது பலநூறு ஆண்டுகளுக்கு முந்தைய கருங்கல் மூலவர் சிலை மற்றும் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. ஐம்பொன் சிலைகள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. மற்ற விக்ரகங்கள் அனைத்தும் தற்போது ஒரு தகர கொட்டகை அமைக்கப்பட்டு அதில் பிதிஷ்டை செய்யப்பட்டு இன்று வரை கிராமமக்களால் வழிபாடு செய்து வருகின்றனர்.
ஆயிரம் ஆண்டுகளாக மந்திரங்கள் உச்சரிக்கப்பட்ட ஊர் என்பதால் திருபுவனம் ஊருக்குள் நுழையும் போதே ஆன்மீக அதிர்வுகளை பக்தர்கள் உணலாம்.
சோழமன்னர்கள் சைவ வழிபாட்டை பின்பற்ற தொடங்கியபோது பெருமாள் கோயில்களை அழித்திருக்கிறார்கள் பின்வந்த சோழ மன்னர்கள் தங்கள் மூதாதையர்கள் தவறுகளுக்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டு மீண்டும் வைனவ கோயில்களை எழுப்ப தொடங்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் பூர்வ புண்ணியம் எனும் முந்தைய பிறவியில் தாங்கள் அல்லது தங்களது முந்தைய பரம்பரையில் யாரோ செய்த தவறுக்காக சிரமங்களை அனுவிப்போர் அதற்கான பரிகாரம் தேடி இக்கோயிலுக்கு வந்து இறைவனிடம் மன்னிப்பு வேண்டி வழிபட்டு செல்கின்றனர்.
பழைமை மாறாமல் இந்த கோயிலை அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஊர் மக்களால் அதற்காக திட்டமிடப்பட்டு இத்திருக்கோயிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோயில் திருப்பணிக்கு அரசிடமிருந்து நிதி எதுவும் கிடைக்கப்பெறாததால் கோயில் திருப்பணி பாதியிலேயே முடங்கி போகும் நிலை உள்ளது. வரலாறு பேசும் இந்த கோயில் திருப்பணி முடிய அரசு முழுமையான உதவிகளை செய்ய வேண்டும் என கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.