BREAKING NEWS

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.

கதிராமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி 3 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 138 மாணவ, மாணவியர் கல்விப் பயில்கின்றனர். பள்ளி தொடங்கி தற்போது 3வது ஆண்டாக பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாணவர்கள் செல்வது குறிப்பிடத்தக்கது.

 

இப்பள்ளியில் மாணவ, மாணவியர் அமர்வதற்கு போதுமான வகுப்பறை வசதிகள் தேவை என்ற அடிப்படையில் தற்பொழுது எம்.பி. மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இரண்டு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவியரின் தேவை உணர்ந்து எண்ணங்களின் சங்கமம் அமைப்பின் வழிகாட்டலுடன் திருவள்ளூர் மாவட்டம் கல்வி சேவா அறக்கட்டளை மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பில் மாணவ, மாணவியர் அமர்வதற்கு அதிநவீன வசதிகளும் கூடிய 38 டெஸ்க், பெஞ்ச் வடிவமைப்பு கொண்ட இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடந்தது.

 

 

பள்ளி தலைமை ஆசிரியர் செல்லதுரை தலைமை வகித்தார். ஊராட்சித் துணைத் தலைவர் சூடாமணி, பள்ளி எஸ். எம்.சி. துணை தலைவர் சந்திரமோகன், ஆசிரியர்கள் மகாலட்சுமி, ரம்யா, அமுதா, சக்தி, ஆய்வக உதவியாளர் கவிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் கல்வி மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் மாணவர் இருக்கைகளை பெற்று சிறப்புரையாற்றி பேசுகையில்,

 

ஒவ்வொரு பள்ளியிலும் வளர்ச்சியும் தலைமை ஆசிரியர் பங்கு மிகவும் முக்கியமானது. பள்ளியில் வசதிகள் இல்லை என்று சொல்வதைவிட அதனை பெறுவதற்கான வழிகளைப் பற்றி தலைமை ஆசிரியர்கள் சந்திக்க வேண்டும். தேனி போல் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீடும் குடும்ப தலைவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பொறுத்தே அமையும். அதுபோல  தலைமை ஆசிரியர் செயல்பாட்டில் தான் பள்ளியின்  வளர்ச்சி உள்ளது. தங்கள் குழந்தைகளைப் போல் பள்ளியில் பயிலும் குழந்தைகளை கருத வேண்டும்.

 

 

அப்படி செயல்பட்டால் பள்ளியின் கல்வி கற்றல், அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட அனைத்தும்  சிறப்பாக அமையும். தங்கள் குடும்பத்தை பற்றி கூட பெரிதாக கருதாமல் பள்ளிக்காக உழைக்கும் ஆசிரியர்கள் ஒரு சிலர் உள்ளனர் அந்த வகையில் கதிராமங்கலம் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லதுரையின் செயல்பாடு உள்ளது பாராட்டுக்குரியது. மேலும் பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் சிறப்பான மதிப்பெண் பெற்று தேர்ச்சி விழுக்காட்டிலும் சிறப்பிடம் பெறுவதற்கு தலைமை ஆசிரியர் பள்ளி கல்விக்குழு மற்றும் ஆசிரியர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.

 

முன்னதாக பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. பள்ளிக்கு ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத 100 சதவீத வருகை பதிவு செய்திருந்த 4 மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர் ராமநாதன், பாலமுருகன், மணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS