BREAKING NEWS

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.

ராஜபாளையம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் ஊராட்சி தலைவர் ரூ. 2 லட்சம் வரை முறைகேடு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஜமீன் கொல்லங் கொண்டான் கிராமத்தில் கடந்த 2021 – 2022ம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட பணிகள் குறித்த தணிக்கை இன்று நடைபெற்றது.

 

ஶ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றும் பானுமதி தணிக்கை செய்தார்.

தணிக்கையில் செலவு அறிக்கையை வாசித்த போது, சேவுக பாண்டியன் என்பவரது தோட்டத்தில் பண்ணை குட்டை அமைத்த வகையில் ரூ. 2 லட்சம் செலவானதாக தெரிவித்துள்ளார்.

 

அந்த இடத்தில் ஜேசிபி மூலம் பண்ணை குட்டை அமைக்கப் பட்டதாகவும், இதில் 100 நாள் பணியாளர்கள் வேலை செய்யவில்லை எனவும் பணியாளர்கள் தெரிவித்தனர். அந்த பணியில் ஊதியம் பெற்றவர்கள் விபரங்களை பார்த்த போது, ஊராட்சி தலைவரின் உறவினர்கள் மற்றும் அவரது கடை பணியாளர்களின் பெயர்கள் குறிப்பிடப் பட்டிருந்தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

 

மேலும் 100 நாள் வேலைக்கு வந்த பணியாளர்கள் தவிர்த்து, ஆலைகளுக்கும், செங்கல் சூளைகளில் பணிக்கு சென்றவர்கள் பெயரும் இணைக்கப்பட்டு ஊராட்சி செயலர் மற்றும் தலைவர் ஊதியத்தில் முறைகேடு செய்திருப்பதும் தணிக்கை அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த முறைகேடு குறித்த தகவல்களை வழங்குமாறு கலந்து கொண்ட பணியாளர்கள் தணிக்கை அதிகாரியிடம் கேட்டனர். இதற்கு தணிக்கை அதிகாரி பானுமதி பதிலளிக்காமல் கூட்டத்தில் இருந்து அவசரசமாக வெளியேறினார்.

 

தணிக்கை அறிக்கையின் முடிவு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கும் அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். எனவே வெளி நடப்பு செய்த அதிகாரியை கண்டித்து 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் சமுதாய கூடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த திட்டத்தின் கீழ் நடைபெற்ற முறைகேடு குறித்து உரிய விசாரணை மேற் கொள்ள மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை அடுத்து சுற்றி பாதுகாப்புக்கு இருந்த காவல் துறையினர் பொது மக்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

ம. வெள்ளானைப்பாண்டியன் ராஜபாளையம்.

CATEGORIES
TAGS