தூத்துக்குடி மாநகராட்சியில் பட்ஜெட் தாக்கல்: ரூ.112.89 இலட்சம் உபரி வருமானம்.
தூத்துக்குடி மாநகராட்சியில் 2023-2024 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தார். மாநகராட்சியில் ரூ 112.89 லட்சம் ரூபாய் உபரி வருமானம் ஏற்படும். குடிநீர் வடிகால் நிதியில் ரூ.755.21 லட்சம் உபரி வருமானம் வரும் என தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் இன்று காலை நடைபெற்றது. பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில், “2022-2023 வரவு செலவு அறிக்கையை இம்மாமன்றம் அங்கீகரித்ததின் பேரில் 2022-2023 ம் ஆண்டிற்கு வருவாய் நிதியில் வரவினங்களும் செலவினங்களும் இறுதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டிற்காக 2023-2024 வருவாய் நிதியில் ரூ.112.89 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.755.21 இலட்சம் உபரியாக வருமானம் வரும் எனவும், கல்வி நிதியில் ரூ.176.00 இலட்சம் உபரியாக வருமானம் ஏற்படும் எனவும் உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.
வருவாய் நிதி: நடப்பு ஆண்டில் சொத்துவரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலமாக ரூ.3164.39 இலட்சம், அரசு சுழற் நிதியாக ரூ.690.00 இலட்சம், அரசு மானியமாக ரூ.8400.00 இலட்சம் மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் 2561.00 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.14815.39 இலட்சம் வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் நடப்பு ஆண்டிற்காக சாலை, கட்டிடங்கள் மற்றும் இதர பராமரிப்பு செலவினங்களுக்காக ரூ.815.50 இலட்சம், இயக்க செலவினங்களுக்காக ரூ.4733.00 இலட்சம், சம்பளம், ஒய்வூதியம் மற்றும் ஒய்வூதியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.6775.30 இலட்சம், நிர்வாக மற்றும் இதர செலவினங்களுக்காக ரூ.2378.70 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.14702.50 இலட்சம் செலவாகும் என உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ரூ.112.89 இலட்சம் உபரியாக வருமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குடிநீர் மற்றும் வடிகால் நிதி: நடப்பு ஆண்டில் குடிநீர் வரியாக ரூ.1446.68 இலட்சமும் பயன்பாட்டு கட்டணமாக ரூ.4019.50 இலட்சமும் இதர வருமானமாகவும் ரூ.331.00 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.5797.18 இலட்சம் வருமானமாக பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் குடிநீர் பணி இயக்க செலவினத்திற்காக ரூ. ரூ.1525.00 இலட்சமும், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக ரூ.665.00 இலட்சமும், ஊதியம் மற்றும் ஒய்வூதியதாரர் செலவினத்திற்காக ரூ761.76 இலட்சமும், நிர்வாக செலவினங்களுக்காக 90.21 இலட்சமும், நிதி செலவினங்களுக்காக ரூ.2000.00 இலட்சமும் என ஆக மொத்தம் ரூ.5041.97 இலட்சமும் செலவாகலாம் என மதிப்பீடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.755.21 இலட்சம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்ப கல்வி நிதி: நடப்பு ஆண்டில் கல்வி வரியாக ரூ.532.00 இலட்சமும் மற்றும் இதர வருமானமாக ரூ.30.00 இலட்சம் என ஆன மொத்தம் ரூ.562.00 இலட்சம் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதில் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்கு 236.00 இலட்சமும், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.150.00 இலட்சம் என ஆக மொத்தம் ரூ.386.00 இலட்சம் செலவாகும் என தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் உபரியாக ரூ.176.00 இலட்சம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.