ராஜபாளையத்தில் நடைபெற்ற சமரச தின விழிப்புணர்வு பேரணியில் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சமரச நாள் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வழக்குகள் பேசி தீர்வு காணப்படும்.
இத் தினம் குறித்து, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் சமரச தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. காந்தி சிலை முன்பிருந்து புறப்பட்ட பேரணியை மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு வழக்கறிஞர்கள், வட்ட சட்டப் பணிகள் குழு நிர்வாகிகள், தனியார் கல்லூரி மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
இந்த ஊர்வலம் காந்தி சிலை, முடங்கியாறு சாலை, பண்ணையார் ஆர்ச், பொன் விழா மைதானம், பெரிய பாலம், சம்மந்தபுரம், அக்ரஹாரம் தெரு, வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று ஒருங்கிணைந்த நீதிமன்றம் எதிரே நிறைவடைந்தது.
ஊர்வலம் வந்த வழியில் நின்றிருந்த மக்களுக்கு சமரச தினம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.