எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி பட்டியலில் சேர்த்திடக் கோரி தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் திருச்சியில் கோரிக்கை பேரணி.
நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் பங்கேற்பு.
தமிழக தேவேந்திர குல வேளாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் நிறுவனத் தலைவர் பாசராஜேந்திரன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருச்சியின் மத்திய பகுதியில் தேவேந்திரகுல வேளாளர்களின் அடையாளச் சின்னமாக தியாகி இம்மானுவேல் சேகரனாரின் முழு உருவச் சிலையை நிறுவிட வேண்டும். செப்டம்பர் 11-ந் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்திட வேண்டும்.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள மணி மண்டப வளாகத்தில் தேவேந்திர சமூக தலைவர்களின் சிலையை வைக்காமல் புறக்கணித்ததன் காரணம் என்ன? என்பதை விளக்க வேண்டும்.
திருச்சி-துறையூர் பிரிவு ரோட்டில் சுதந்திரப் போராட்ட வீரர் சுந்தரலிங்க குடும்பனாரின் சிலையை நிறுவிட வேண்டி கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழக அரசுக்கு கடிதம் வாயிலாகவும், நேரடியாகவும் சென்று மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக சுதந்திரப் போராட்ட மாவீரன் சுந்தரலிங்க குடும்பனாரின் முழு உருவச் சிலையை உடனடியாக அமைத்திட வேண்டுகிறோம்.
உலகமெங்கும் வாழும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் அரை நூற்றாண்டிற்கும் மேலாக போராடி கேட்டு வரும் தலையாய கோரிக்கையான எஸ்.சி.பட்டியலை விட்டு வெளியேற்றி பி.சி.பட்டியலில் சேர்த்திட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அவரது நேரடி கட்டுப்பாட்டில் வைத்து, லஞ்சம் லாவண்யம் இன்றி அவர்களுக்கு பணி வழங்கிட வேண்டுகிறோம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பினை வழங்கிட வேண்டும். திருச்சி பஞ்சப்பூர் அருகில் அமைந்து வரும் புதிய பஸ் நிலையத்திற்கு தேவேந்திர குல வேளாளர்களின் அடையாளமாக திகழும் தியாகி இம்மானுவேல் சேகரன் பெயரை சூட்ட வேண்டும்.
இந்த அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி தந்திட வேண்டும்என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நிறுவன தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் திருச்சியில் நேற்று (திங்கட்கிழமை) திருச்சி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் இருந்து பேரணியாக கலெக்டர் அலுவலகம் நோக்கி சென்றனர்.
இந்த பேரணியில் 1000க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் .பின்னர் மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் தேவேந்திரகுல வேளாளர் நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் பாச.ராஜேந்திரன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ் கண்ணன், மாநில பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் மின்னல் சங்கர், மாநில துணைச் செயலாளர் பழ.சுந்தரம், மாவட்ட தலைவர் செல்வம்,
தலைமை அலுவலக செயலாளர் கொட்டப்பட்டு ரமேஷ், தஞ்சை குணா, புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கனகராஜ், சி.கே. ஆனந்த், கூத்தைப்பார் முருகேசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.