காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் 72ஆவது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரியின் உமையாள் அரங்கில் நடைபெற்றது. 2018- 2021ஆம் கல்வியாண்டில் இளநிலை, முதுநிலை கலை அறிவியல் பாடங்களில் பயின்று பட்டம் பெற தகுதியுடையோருக்கு பட்டம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் பெத்தாலெட்சுமி தலைமை வகித்து பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர் சொக்கலிங்கம் அவர்கள் பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் நாட்டையும் மொழியையும் இரு கண்களாக நினைக்க வேண்டும் என்றும் எல்லா மதங்களும் சமமே என்ற உணர்வோடு அனைவரையும் சமமாக நடத்துகின்ற பாங்கு மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்றும் தாய் தந்தை மற்றும் கல்வி தந்த ஆசிரியரை மதித்து நடக்க வேண்டும் என்றும்,
தான் நீதிபதியாக வர வேண்டும் என்ற உந்துதலை எனக்குள் ஏற்படுத்தியவர் தனது ஆசிரியர் என்றும் மாணவர்கள் விழிப்புணர்வோடு இருந்து வாழ்வில் வெற்றி பெற்று தாங்கள் படித்த கல்லூரிக்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றும் ஒருவரின் வெற்றியின் உயரம் அவரது ஒழுக்கத்தில் இருக்கிறது என்றும் அவர் தனது பட்டமளிப்பு விழா பேருரையில் குறிப்பிட்டார்.
விழாவில் பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டமளிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த 72வது பட்டமளிப்பு விழாவில் 2018-2021 ஆம் கல்வியாண்டில் பயின்ற 941 இளநிலை மாணவர்களும்,214 முதுநிலை மாணவர்களும் 18 ஆய்வியல் நிறைஞர்களும் என மொத்தம் 1173 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் 66 மாணவர்கள் அழகப்பா பல்கலைக்கழக அளவில் தரம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் முத்துராஜன்