தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் “” தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் நூதன முறையில் எதிர்ப்பு .

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் தமிழர்கள் இருக்கும் சிவமோகா பகுதியில் பாஜக முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வாக்கு சேகரிக்க சென்றனர்.
அப்போது, அங்கு தமிழர்கள் அதிகம் இருந்த காரணத்தால், மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பப்பட்டு திடீரென பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழ் ஆர்வலர்களும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பாஜக கூட்டணியில் இருக்கும் அதிமுகவும் இந்த சம்பவத்துக்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் தஞ்சையில் ஜோதி அறக்கட்டளை சார்பில் “ எட்டுத்திக்கும் பரவட்டும் தமிழ்த்தாய் வாழ்த்து “ என்ற தலைப்பில் கோலப்போட்டி நடத்தப்பட்டது . தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர் – சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட சுமார் 100 பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று தமிழ்த்தாயின் சிறப்புகளை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் தத்தமது வீட்டின் முன் வண்ண வண்ண கோலமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
“ தமிழ்த்தாய் – தவறிழைக்கும் தலைவரையும் பணிய வைப்பாள் , தமிழ்த்தாய் – தமிழருக்கு தனிப்பெரும் தாய் அவள் , தீந்தமிழ் தந்த தமிழ்த்தாய் , இன்பத்தமிழ் தந்த தமிழ்த்தாய் , நற்றமிழ் தந்த தமிழ்த்தாய் , பொற்றமிழ் தந்த தமிழ்த்தாய் ” உள்ளிட்ட தமிழ்த்தாயை போற்றும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய கோலங்களை பெண்கள் வரைந்திருந்தனர் . கோலப்போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் ஜோதி அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
கர்நாடகாவில் தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்டதற்கு தஞ்சையில் கோலப்போட்டி மூலம் நூதன முறையில் மொழியுணர்வு மூலம் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள் .
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.