சோளிங்கர் அருகே சோமசமுத்திரத்தில் திரௌபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பாண்டவர் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் சித்திரை மாதம் அக்னி வசந்த விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அக்னி வசந்த விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அக்னி வசந்த விழா கொடியேற்றத்தை முன்னிட்டு பாண்டவர்கள் சமேத ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திரௌபதி அம்மன் மற்றும் அர்ஜுனன், பெருமாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.
அதன் பின் கொடிமரத்திற்கு சிறப்பு தீபாரதனை செய்யப்பட்டு அக்னி வசந்த விழா துவங்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் காப்புக் கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில் நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவு மற்றும் நாடகம் தெருக்கூத்து ஆகியவை 16 நாட்கள் நடைபெற உள்ளது.
21 ந்தேதி துரியோதனன் படுகளம் மற்றும் தீமிதி விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.