BREAKING NEWS

ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.

ஊராட்சி துணைத் தலைவருடன் பொதுமக்கள் போராட்டம்.

தா.பழூர் பெண் ஊராட்சி துணைத் தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை மாற்றி மற்றொரு உறுப்பினருக்கு கொடுத்ததை கண்டித்து துணை தலைவருக்கு ஆதரவாக கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டு வந்த மாலதி ராஜேந்திரன் ஊராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவில்லை என்று கூறி அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பின்னர் அதனை அடிப்படையாகக் கொண்டு அவரது ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியை ரத்து செய்துவிட்டு அவருக்கு மாற்றாக வேறு ஒரு வார்டு உறுப்பினருக்கு நிர்வாக கையெழுத்திடும் அதிகாரத்தை வழங்கி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இந்த தகவலை அறிந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாலதி ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் திடீரென ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஆனால் அதற்கு துணைத் தலைவராக உள்ள மாலதி ராஜேந்திரன் ஒத்துழைப்பு தராததால் அவரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பதவியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடுகளுக்கு துணை புரியும் வகையில் மற்றொரு ஊராட்சி மன்ற உறுப்பினருக்கு கையெழுத்து அதிகாரம் ஆனால் முறையான விசாரணை செய்யப்படாத நிலையில் கையெழுத்து அதிகாரத்தை மாற்றி கொடுத்தது தவறு என்றும் கூறி மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

அவர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) விஸ்வநாதன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். தா.பழூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் முறைகேடுகளை பற்றி விசாரிக்காமல் தவறான முடிவெடுத்து அதனை மாவட்ட கலெக்டருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரை செய்து விட்டதாக அவர் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

 

இதற்கு பதில் சொல்ல முடியாத வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதன் தனது அறைக்கு சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தா பழூர் பிரிவு சாலை அருகே சென்று அங்கு ஜெயங்கொண்டம் கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 

தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் துரை, தா பழூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத், வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆனந்த், ஷேக் அப்துல்லா சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா அழகப்பன் வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினர்.

 

அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விஸ்வநாதனிடம் தா பழூர் ஒன்றியத்தில் ஆறு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவருக்கும் துணை தலைவருக்கும் இடையில் பிரச்சனைகள் இருப்பதால் இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் புகார்களை அளித்துள்ளனர்.

 

ஆனால் தா பழூர் மட்டும் அவசர கதியில் துணை தலைவரின் கையெழுத்து அதிகாரத்தை ரத்து செய்துவிட்டு மற்றொரு நபருக்கு வழங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பதில் சொல்லாததால் பரபரப்பு நிலவியது.

 

தொடர்ந்து தாசில்தார் துரை l பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாலதி ராஜேந்திரன் உள்ளிட்ட அவர்களது ஆதரவாளர்களை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக மனு அளிக்குமாறும் தங்களது நிலைப்பாடு குறித்து அவரிடம் விளக்கமாக தெரிவிக்கவும் ஆலோசனை வழங்கினர்.

 

இதனை அடுத்து இன்று அரியலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் மனு வழங்க உள்ளனர். போராட்டத்தில் 200க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

CATEGORIES
TAGS