சட்ட விதிமுறைகள்; குற்றாலம் கடைகளில் தீ விபத்து – புதிய தமிழகம் கட்சித் தலைவர் குற்றச்சாட்டு.
தென்காசி மாவட்டம், குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள திருக்குற்றாலநாத சுவாமி திருக்கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள 40க்கும் மேற்பட்ட கடைகளில் நேற்று தீ விபத்து ஏற்பட்டு கடைகள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது தீயானது முற்றிலும் அணைக்கப்பட்டுள்ளது. தீ விபத்து நடைபெற்ற இடத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, தீ விபத்தில் சேதம் அடைந்த கடையின் உரிமையாளர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அவர், அவர்கள் அடைந்துள்ள நஷ்டம் குறித்து விசாரித்து தெரிந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள குற்றாலநாதர் சுவாமி திருக்கோவில் சுற்றுப்புற மதில் சுவர் அருகே கடைகள் அமைக்க அனுமதி கொடுத்தது தவறு எனவும், பல்வேறு சட்ட விதிமுறைகளை மீறி இதுபோன்ற அனுமதியை கோயில் நிர்வாகம் கொடுத்ததால் தான் இது போன்ற விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்துக்கான முழு பொறுப்பு கோயில் நிர்வாகமும், அதில் முதல் குற்றவாளி கோயில் உதவி ஆணையராக உள்ள கண்ணதாசன் தான். தொடர்ந்து, சட்ட விரோதமாக கடைகள் அமைக்க அனுமதி வழங்கிய உதவி ஆணையாளர் கண்ணதாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நஷ்டம் அடைந்த வியாபாரிகளுக்கு கருணை அடிப்படையில் தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இழப்பீடு தொகையை குற்றாலநாதர் சுவாமி கோயில் உதவி ஆணையாளராக உள்ள கண்ணதாசன் என்பவரிடமிருந்து பெற்று நஷ்டம் அடைந்த வியாபாரிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.