BREAKING NEWS

இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 40 தொகுதிகளிலும் பிரசாரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முடிவு

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாநிலக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் அளித்த பேட்டியில் மத்திய ஆட்சி அதிகாரத்தில் 2014 முதல் 10 ஆண்டுகாலமாக உள்ள பாஜக தலைமையிலான அரசு, தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கும், மக்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் இனிமேல் வாழ்க்கை நடத்த முடியாத அளவுக்கு அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. உரம் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி உள்ளிட்ட வேளாண் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. விதித்து விலைவாசி தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருட்களுக்கு எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை அடிப்படையில் குறைந்தபட்ச ஆதார விலையை வழங்குவோம் என்ற மோடி அரசு இதுவரை வழங்கவில்லை. விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவோம் எனக் கூறிய பிரதமர் மோடிதான் இந்திய நாட்டு விளைநிலங்களையும், விவசாயிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றக்கூடிய மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்தார்.
எனவே, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பிரசாரம், விவசாயிகளின் வீடுகளுக்குச் சென்று துண்டறிக்கைகளை வழங்குவது, அரங்கம் கூட்டம் நடத்துவது போன்ற களப் பணி மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் சண்முகம்.

CATEGORIES
TAGS