BREAKING NEWS

ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா

ஆம்பூர் குடியாத்தம் செல்லும் பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்: பார்த்து ரசித்த நடத்துனர் மீது நடவடிக்கை பாயுமா

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வேலூர் மாவட்டம் குடியாத்தத்திற்கு மாலை 4.10 மணியளவில் அரசு நகரப் பேருந்து G22 வழித்தடம் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் ஏறும் மற்றும் இறங்கும் வழிகளில் கதவுகள் ( ஹைட்ராலிக்) எதுவும் பொருத்தப்படவில்லை.

இதனால் பழையபடி திறந்த நிலையில் ஏறும் படிகளும், இறங்கும் படிகளும் வசதியாக காணப்பட்டன. இதனால் பள்ளி முடிந்து வீடுகளுக்கு திரும்பும் மாணவர்கள் படிக்கட்டில் வௌவால்களை போல் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர்.

இவர்களை அதட்டி பேருந்துக்குள் செல்ல அந்த பேருந்து நடத்துனர் அறிவுறுத்தவே இல்லை. அதற்கு மாறாக பள்ளி மாணவர்கள் படும் அவதியை கண்டு ரசித்தார் பேருந்து ஓட்டுனர்.

இதைப் பற்றி கண்டு கொள்ளாமல் பேருந்து இயக்குவதிலேயே குறியாக இருந்தார். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் மாணவர்களின் உயிரைப் பற்றி அவர்களுக்கு எவ்வித கவலையும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

யார் வீட்டு இழவோ பாய் போட்டு அழுகிறது என்ற ரீதியில் அவர்கள் அரசு பேருந்தில் நடத்துனராகவும், பேருந்து ஓட்டுநராகவும் பணியாற்றி வருகின்றனர். இப்படி சொல்லவே மனம் பதை பதைக்கிறது. பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்றும், படிகளில் தொங்க கூடாது என்றும் அறிவுரை கூறி அனுப்பி வைக்கின்றனர்.

ஆனால் இங்கு நடைமுறையில் அந்த நிலைமை மாறி தலைகீழாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படியில் பயணம் நொடியில் மரணம் என்ற வாசகத்தை மறந்து விட்டு படியில் தொங்கிக் கொண்டு செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர் பள்ளி மாணவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படி கண் முன்னே நடைபெறும் தவறுகளை தட்டிக் கேட்டு அதை திருத்திக் கொள்ள வேண்டும் என்று அந்த பள்ளி மாணவர்களை ஒரு முறை கூட எச்சரிக்கை செய்யாமல் நமக்கு என்ன என்று கண்டும் காணாமல் அலட்சியமாக பணியாற்றி வருகிறார் இந்த பேருந்தின் நடத்துனர் என்று சொன்னால் அதுதான் நிதர்சன உண்மை.

ஆம்பூரில் இருந்து குடியாத்தத்திற்கு சென்ற அந்த ஜி 22 வழித்தடம் கொண்ட அரசு நகரப் பேருந்தில் இது போன்ற அநியாயம் கண் முன்னே நடப்பதை காண முடிந்தது.

தங்களது பிள்ளைகள் என்றால் இவ்வாறு கண்டும் காணாமல் விட்டு விடுவாரா அந்த அரசு பேருந்து நடத்துனர் என்ற கேள்வி அனைத்து பெற்றோர்களது மனதிலும் ஏழாமல் இல்லை என்றே சொல்லலாம்.

ஆக மொத்தத்தில் அரசு பேருந்து குடியாத்தம் கிளை மேலாளர் அல்லது ஆம்பூர் கிளை மேலாளர் இந்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுநர் மீது ஒரு விசாரணை நடத்தி அவர்களை சட்டரீதியாக தண்டிக்க வேண்டும் என்பது பெற்றோர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவும், கோரிக்கையாகவும், வேண்டுகோளாகவும் மாறி உள்ளது.

பெற்றோர்களின் கோரிக்கை நிறைவேறுமா? அல்லது நிராகரிக்கப்படுமா? அல்லது அலட்சியப்படுத்தப்படுமா? என்பதை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் கோட்ட மேலாண் இயக்குனர் தான் முடிவு செய்ய வேண்டும். அவரது நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

CATEGORIES
TAGS