வண்டறந்தாங்கலில் வளர்ந்துள்ள 40 பனை மரங்கள் வெட்டி சாய்ப்பு: விஏஓ துணை போவதாக புகார்!

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வண்டறந்தாங்கல் கிராமத்தில் உள்ள ஒரு நிலத்தில் சுமார் 35க்கும் மேற்பட்ட பனை மரங்கள் வளர்ந்து இருந்தன. இதனை யாருடைய உத்தரவும் இல்லாமல் அந்த நிலத்திற்கு சொந்தக்காரர் சுமார் 40 மரங்களை வெட்டி சாய்த்து உள்ளார்.
இதற்கு வண்டறந்தாங்கல் கிராம நிர்வாக அலுவலர் நிவேதாகுமாரி வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக கிராமத்து மக்கள் சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர்.
வளர்ந்த பச்சை பனை மரங்களை வெட்டி சாய்த்ததற்கு கிராம பொதுமக்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காட்பாடி வருவாய் ஆய்வாளர், காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லையாம்.
இப்படி ஒரு அதிகார துஷ்பிரயோகம் நடந்தும் கூட நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் அமைதி காத்து வருகின்றனர்.
இப்படி கண்முன்னே நடக்கும் அநியாயத்தை தடுத்து நிறுத்த வேண்டியவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வேதனைக்குரியதாகும்.
ஆதலால் மாவட்ட நிர்வாகமும், வருவாய்த் துறையும் வண்டறந்தாங்கல் கிராமத்தில் நடந்துள்ள அதிகார துஷ்பிரயோகத்தை கண்டிக்கும் வகையில் 40 பனை மரங்களை அடியோடு வெட்டி சாய்த்த நிலத்தின் உரிமையாளர் சல்லாவூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் அருண் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக மாறி உள்ளது.
பொதுமக்களின் வேண்டுகோளை, எதிர்பார்ப்பை வருவாய் துறையும், தமிழக அரசும் நிறைவேற்றுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
செய்தி ஆசிரியர் ச வாசுதேவன்