15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்!

கலந்தாய்வின் மூலம் பணி அமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டம்!
கலந்தாய்வின் மூலம் பணியமர்த்தப்பட்ட பணியிடங்களில் பணி செய்ய அனுமதிக்காததை கண்டிப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சி நிதி தணிக்கை துறை சார்பில் நாளை மாநிலம் தழுவிய அளவில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
உள்ளாட்சி நிதி தணிக்கை துறை மற்றும் மாநில அரசு தணிக்கை துறைகளில் அவசர அவசியம் கருதி எடுக்கப்படும் விடுப்புகளுக்கு கூட ஒப்புதல் தர மறுக்கும் அநீதி தொடர்கிறது. அத்துடன் அவசர நிமித்தமாக எடுக்கப்படும் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு போன்ற விடுப்புகளுக்கு கூட ஒப்புதல் தர இருக்கும் அநீதியை கண்டித்தும், பணி அமர்த்தப்பட்ட இடங்களில் பணி செய்திட அனுமதி மறுப்பதை கண்டித்தும், ரேண்டமைஸ்ட் தணிக்கை பணித்திட்டம் என்ற பெயரில் 200 கிலோ மீட்டர் தொலைதூர பணி திட்டங்களில் திட்டங்களை வகுத்து அலைச்சலையும், மன உளைச்சலையும் ஏற்படுத்துவதை கண்டித்தும் இந்த மாநிலம் தழுவிய கருப்பு பட்டை அணிந்து கொண்டு பணி செய்யும் போராட்டம் நாளை (14ஆம் தேதி) நடைபெறுகிறது.
இதேபோன்று வேளாண் விரிவாக்க மைய தணிக்கைக்கு போதுமான மனித நாட்கள் வழங்கப்படாததை கண்டிப்பது, வரைமுறை என்று குற்றச்சாட்டு குறிப்பாணைகளை வழங்குவதை கண்டிப்பது, முகாம் தணிக்கை பணியாளர்களை ஒரே நாளில் முகாம் பணிபுரியவும்,
தொடர்ந்து அலுவலக பணியும் செய்திட கட்டாயப்படுத்துவதை கண்டித்தும், முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட உடன் நிகழ் தணிக்கை நடைமுறையை ஒழித்துக் கட்டும் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதை கண்டித்தும், முகாம் பணி மேற்கொள்ளும் பெண் தணிக்கை பணியாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததை கண்டித்தும்,
நூற்றுக்கும் மேற்பட்ட உதவி இயக்குனர் பணியிடங்களை நிரப்பாமல் கூடுதல் பொறுப்பு மூலம் பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கண்டித்தும் இந்த போராட்டம் நடைபெற உள்ளது. சி ஏ எம் எஸ் தணிக்கை மென்பொருளை மேம்படுத்தாமல் அரைகுறையாக அமல்படுத்தப்பட்டதை கண்டித்தும்,
சனிக்கிழமைகளில் கூட அலுவலக பணி என்று அலைகழிக்கப்படுவதை கண்டித்தும், விடுப்புக்கு விண்ணப்பித்த நாட்களை பழைய நாட்களாக கழிக்கும் அநியாயத்தை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகள் தணிக்கை பணியாளர்களுக்கான உரிமைகள் மறுதலைக்கப்படுவதை கண்டித்தும்,
சங்கத்தின் நியாயமான கோரிக்கைகளை இரண்டாம் காலாண்டிலும் நிறைவேற்றப்படாததை கண்டித்தும், மொத்தத்தில் தணிக்கை பணி முகாம்கள் வதை முகாம்களாக மாறிவரும் சூழலில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் மாநிலம் தழுவிய அளவில் நாளை நடைபெறும் கருப்பு பட்டை அணிந்து பணி செய்யும் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு அளிக்குமாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஆய்வாளர் மன்றம் இணைந்து வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் பரபரப்பான சூழல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.