பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட்

குமரி. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளத்தை மூடி அதன் கரையோரத்தில் நின்ற சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பிலான மரங்களை முறித்து திருடி எடுத்து பிளாட் போட்ட ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்
சிறிய அபராதம் விதித்து குற்றவியல் நடவடிக்கை எடுக்காமல் காப்பாற்றிய வருவாய்துறை அதிகாரிகள்.
அரசு நீர்நிலை புறம்போக்கு நிலத்தையும் விளைநிலங்களையும் வீட்டுமனைகளாக மாற்றி பதிவு செய்த பதிவுத்துறை அதிகாரிகள்
பதிவுத்துறை ஐஜி நடவடிக்கை எடுப்பாரா..? மாவட்ட நிர்வாகம் விழித்துக் கொள்ளுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலை புறம்போக்குகள் மற்றும் குளங்கள் ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது.
பெரும்பாலான ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்கள் குளத்தின் அருகே உள்ள விளைநிலங்களை வாங்கி அத்துடன் அப்பகுதியில் இருக்கும் குளத்தின் பகுதிகளையும் ஆக்கிரமித்து பதிவுத்துறை சார்பதிவாளர்களை சரிகட்டி வீட்டு மனைகளாக பதிவு செய்து வருவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கோதநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கல்குளம் தாலுகா குமாரபுரம் கிராமத்தில் முட்டைக்காடு அருகே உதயா நகர் பகுதியில் புல எண் 513/4 ல் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் சிறு குளம் உள்ளது .
அதன் அருகே உள்ள குமாரபுரம் கிராமம் புல எண்கள் 513/3A1, 513/3B, 513/5, 513/6, 513/7, 513/8, 524, 529 ஆகியவை விவசாய விளை நிலங்களாகும்.
அந்த விவசாய விளை நிலங்களில் A- SQUARE CITY என்ற பெயரில் பிளாட் போட்டு தக்கலை சார் பதிவாளர் அலுவலகத்தில் 20சென்ட் 30 சென்ட் 40 சென்ட் என்ற அளவில் பிளாட் பிரித்து அதன் வழியே சாலை அமைத்து விற்பனை நடைபெற்று உள்ளது.
இதற்கு தக்கலை சார் பதிவாளர் இந்த முறைகேடுக்கு துணை போய் உள்ளார். தற்போது வரை குளத்தை ஆக்கிரமித்த நீர்நிலை பகுதிகள் உட்பட விவசாய விளை நிலங்களை ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்களுக்கு ஆதரவாக சார்பதிவாளர் பதிவு செய்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சார் பதிவாளர்கள் விளை நிலங்களை வீட்டுமனைகளாக சட்ட விரோதமாக மாற்றி லஞ்சம் பெற்று பதிவு செய்து விடுவதால் அரசுக்கு பெருமளவு இழப்பு ஏற்படுத்தி உள்ளதோடு சட்டவிரோத செயல்களுக்கு துணை போய் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விவசாய விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றுவதற்கு அரசு ஏற்கனவே பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் அதையெல்லாம் மீறி குமாரி மாவட்டத்தில் பெரும்பாலான சார் பதிவாளர்கள் லஞ்சம் பெற்று பதிவு செய்து விடுகின்றனர்.
மேற்படி சிறு குளத்தின் பகுதியில் நின்ற பொதுப்பணித் துறைக்கு சொந்தமான இடத்தில் நின்ற கரையோர மரங்களை சட்டவிரோத கும்பல்கள் முறித்து எடுத்து உள்ளனர்.
இதுகுறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறை அதிகாரிகள் கட்டப்பஞ்சாயத்து பேசி சிறிதளவு அபராத தொகையை பெற்று விடுவித்து உள்ளனர். சாதாரணமாக அரசு நிலங்களில் உள்ள மரங்களை முறிப்பவர்கள் மீது கிரிமினல் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம்.
ஆனால் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ரியல் எஸ்டேட் மாபியா கும்பல்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும் சட்டவிரோத செயல்களை தடை செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வண்டல் மண் எடுக்க தெரிவு செய்யப்பட்ட குளங்களில் மேற்படி குளமும் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.
மேற்படி குளத்தின் பெரும்பாலான பகுதிகள் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளதால் சுமார் ஒரு ஏக்கருக்கும் குறைவான பரப்பளவில் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே மாவட்ட நிர்வாகம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் சட்ட விரோதமாக லஞ்சம் பெற்று விவசாய விளை நிலங்களை அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வண்ணமாக வீட்டுமனைகளாக பதிவு செய்து கொடுக்கும் சார் பதிவாளர்கள் மீது பதிவுத்துறை தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சுமார் 4 லட்ச ரூபாய் மதிப்பு உள்ள மரங்களை முறித்த சட்டவிரோத கும்பல்கள் மீது கிரிமினல் குற்றவியல் நடவடிக்கை எடுப்பதோடு தவறுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.