நில அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் கையூட்டுப் பெற்று பெண் நில அளவையருடன்.. உதவியாளர் விஜிலென்ஸ் போலீஸாரால் கைது!

சேலம் அருகே நிலம் அளவீடு செய்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சக் கையூட்டு வாங்கிய பெண் நில அளவையர், அவரது உதவியாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட துலுக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன்( விவசாயி). இவர், தனது நிலத்தை அளவீடு செய்து, தனி பட்டா பெறுவதற்காக முறையாக அனைத்து ஆவணங்களையும் வைத்து ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளார்.
அதன்பிறகு, விண்ணப்பித்த ஒப்புகை சீட்டுடன் அனைத்து ஆவணங்களையும் எடுத்துக்கொண்டு, ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள நில அளவை பிரிவில் துலுக்கனூர் பிர்கா நில அளவையர் ஜீவிதா(வயது 29) என்பவரை அனுப்பியுள்ளார்.
அப்போது தனது உதவியாளரான கண்ணதாசன்( வயது 37) என்பவரை அணுகும்படி மனுதாரருக்கு கூறியுள்ளார். அதன்படி மனுதாரர் கண்ணதாசனை சந்தித்து எனது நிலத்தை அளந்து தரும்படி கேட்டுள்ளார்.
அதற்கு நில அளவையரின் உதவியாளரான கண்ணதாசன் உங்கள் வேலையை முடித்து தர 12 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்து தரப்படும் என்று கூறியுள்ளார்.
இருவரும் பேரம் பேசி ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி ஒரு வழியாக பேசியுள்ளனர்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மனுதாரர் குமரேசன், இதுகுறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அவர்கள் ஆலோசனைப்படி, ரசாயன பொடி தடவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை புகார்தரரான குமரேசனிடம் கொடுத்து லஞ்சம் கேட்ட நில அளவை பிரிவு அரசு ஊழியர்களிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.
அதன்படி குமரேசன் இன்று (செப்.,17) மாலை 5 மணியளவில் ஆத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள நில அளவைப் பிரிவில் பணியிலிருந்த துலுக்கனூர் பிர்கா நில அளவையர் ஜீவிதா மற்றும் கண்ணதாசன் ஆகியோரிடம் குமரேசன் ரூ. 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை கொடுத்துள்ளார்.
அந்த ரசாயன பொடி தடவப்பட்ட பணத்தை நில அளவை ஜீவிதாவின் உதவியாளர் கண்ணதாசன் பெற்றுக் கொண்ட போது,
அங்கு மறைந்து இருந்த சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர்கள் நல்லம்மாள், நரேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் இருவரின் கைரேகை பதிந்த ரசாயன பொடி கலப்படம் செய்யப்பட்ட லஞ்சப் பணத்துடன் கையும்,
களவுமாக பிடித்து, கைது செய்து தீவிர விசாரணைக்கு பின் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருவரையும் மருத்துவர் பரிசோதனை செய்த பின் மருத்துவர்களின் சிகிச்சைக்கான ஒப்புதல் சீட்டைப் பெற்று,
அத்துடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் இருவரையும் வெவ்வேறு சிறையில் தள்ளினார்.