பிரம்மபுரத்தில் மலையை அழித்து வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை: கண்டுகொள்ளாத விஏஓ, வட்டாட்சியர்!

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, பிரம்மபுரம் கிராமத்தில் சஞ்சீவராயபுரம் பெருமாள் மலைக் கோவில் அருகே சமூக விரோதிகள் டி.சி. நிலம் மற்றும் மலை புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைப் பிரிவு (லே-அவுட்) அமைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்கு உள்ளூர் திட்டக் குழுமத்தின் எந்தவிதமான முன் அனுமதியும் இல்லை. மேலும் பட்டியலினத்தை சார்ந்தவர்களுக்கு மட்டுமே சொந்தமான டி.சி. நிலத்தையும் பிளாட்டு போட்டு விற்பனை செய்வதால் பின்வரும் நாட்களில் சாதி பிரச்சனை ஏற்பட்டு கலவரம் உருவாகி சட்டம்- ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் கூட உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
மேலும் கனிமவளத் துறை அமைச்சரின் தொகுதியிலேயே மலைகளை அழித்து, கனிம வளத்தை கொள்ளையடித்து பிளாட் போட்டு விற்பனை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த மலை முழுங்கி மகாதேவன்களிடமிருந்து மலைகள் மற்றும் அரசு நிலங்கள் காப்பாற்றப்படுமா? அல்லது தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுமா?.
பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடம் 160 ஏக்கர் கொள்ளையடிக்கப்பட்டு சமூக விரோதிகள் அனுபவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சமூக விரோதிகள் ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை அனுபவித்து வருவதற்கு வாடகை கூட செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இவையெல்லாம் இந்து சமய அறநிலையத்துறை எப்போது மீட்கும் என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறியாகவே மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது. வருவாய்த்துறை மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆகியோரின் நடவடிக்கையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பிரம்மபுரம் விஏஓ ரேகா தனக்கு எதுவும் தெரியாது என்ற ரீதியில் பணியாற்றி வருகிறார்.
மலையை அழித்து வீட்டு மனைகளை அமைத்து தைரியமாக விற்பனை செய்கிறார்களே இது பற்றி உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டதற்கு நான் காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரனிடம் தெரிவித்துவிட்டேன்.
அவரும் வந்து இடத்தை நேரில் பார்த்துவிட்டு சென்றுவிட்டார். இனி அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. பிரம்மபுரம் பகுதியில் புறம்போக்கு இடம் என்று ஒரு சதுர அடி கூட இடம் இல்லை என்று அடித்துக் கூறுகிறார் கிராம நிர்வாக அலுவலர் ரேகா.
இவர் மணல் மாஃபியாக்கள் மற்றும் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் ஏரி மண், ஆற்று மணல் கடத்துவோர் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இணக்கமாக இருந்து கொண்டு தனது பையை நிரப்பிக் கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளாரே தவிர முறையாக பணி செய்ய இவர் தயாராக இல்லை என்பது தெரிந்து விட்டது என்று கூறுகின்றனர்.
இவரைப் பற்றி நன்கு விவரம் அறிந்த சமூக ஆர்வலர்களும், பிரம்மபுரம் பகுதி வாழ் பொது மக்களும் என்று சொன்னால் அது மிகையாகாது. பக்கத்து மாவட்டங்களில் இருந்து கூட வந்து இந்த கிராம நிர்வாக அலுவலரை அணுகி புறம்போக்கு இடம் ஏதாவது பிரம்மபுரம் பகுதியில் உள்ளதா?
என்று கேட்டுச் செல்லும் நிலையும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. நீர்நிலை புறம்போக்குகளை கூட விட்டு வைக்காமல் பட்டா போட்டு கொடுத்துள்ளார் கிராம நிர்வாக அலுவலர். ஒரு திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஒரு பாடல் பாடியிருப்பார்.
வரதப்பா வரதப்பா கஞ்சி வரதப்பா என்ற திரைப்பட பாடல் இடம் பெற்ற படத்தின் பெயரை தனது பெயராகக் கொண்ட திமுக பிரமுகர்தான் இந்த இடத்தை வளைத்து மலையை அழித்து வீட்டுமனை பட்டாவாக மாற்றி வருவதாக பிரம்மபுரம் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஆதலால் பொதுமக்கள் நலன் கருதி கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொகுதியிலேயே கனிம வளம் கொள்ளை போவதும், மலையை அழிப்பதும் நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு கனிமவளத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுப்பாரா?
அல்லது தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் ஏதாவது நாட்டின் மீது அக்கரை கொண்டு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை ஏதாவது எடுப்பாரா?
என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இப்படி தவறுகளை தைரியமாக செய்யும் கிராம நிர்வாக அலுவலர் மீது வருவாய் துறை ரீதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
வேலூர் மாவட்ட நிர்வாகமோ அல்லது வருவாய்த்துறை அமைச்சரோ பிரம்மபுரம் கிராம நிர்வாக அலுவலர் மீது சாட்டையை சுழற்றுவார்களா? என்பதை காலம்தான் முடிவு செய்யும். அதுவரை காத்திருப்போம்.
“ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்”
செய்தி ஆசிரியர் ச.வாசுதேவன்