BREAKING NEWS

வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை!

வேலூர் நறுவீ மருத்துவமனையில் மூட்டு நோயால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 54 வயது பெண் நோயாளிக்கு வேலூர் நறுவீ மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரோபோவை கொண்டு வந்து இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மருத்துவமனை வளாகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் வேலூர் நறுவீ மருத்துவமனையின் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

வேலூரில் இயங்கி வரும் நறுவீ மருத்துவமனை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையில் குணமடைந்த நோயாளிகளை தொடர்ந்து கண்காணிக்கும் பணியும் மருத்துவமனையின் மூலம் நடைபெற்று வருகிறது.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் இம் மருத்துவமனையில் வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு இதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, குடல் நோய் சிகிச்சை, மூட்டு வலி மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு விதமான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம் மருத்துவமனையில் இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் தற்போது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

தற்போது மற்றொரு நிகழ்வாக மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பசுதா சத்பதி என்ற பெண் நோயாளி பல்வேறு நோய் சம்பந்தமாக பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பலனில்லாமல் வேலூர் நறுவீ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்ததில் அவரது கால் முட்டி முற்றிலும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே அவருக்கு முழு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை ரோபோ மூலமாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சை குழுவினர் இங்கிலாந்து நாட்டின் நிறுவனத்தின் தயாரிப்பான (ஸ்மித் & நெஃப்பு) பிரத்தியோக ரோபோ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வழக்கமாக ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது அதிக ரத்தப்போக்கு, திசு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கையாள வேண்டி இருக்கும்.

ஆனால் ரோபோ போன்ற அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் அதிக ரத்தப்போக்கு மற்றும் திசு பாதிப்பு தடுக்கப்படும்.

முக்கியமாக எந்த இடத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ அதை தேர்வு செய்து ரோபோ துல்லியமாக கணித்து தருவதின் மூலம் குறைந்த நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய முடியும்.

தீ விபத்தால் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதற்கான பாதுகாப்பு வழிமுறைகள் பற்றிய பயிற்சி மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டமொன்று அண்மையில் தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ள தீ பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் தேசிய மாணவர் படையினருக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக இதற்கான பயிற்சிகள் வேலூர் நறுவீ மருத்துவமனையில் விரைவில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் இதற்கான பயிற்சிகளை வழங்க உள்ளனர் என்று நறுவீ மருத்துவமனையின் தலைவர் ஜி. வி.சம்பத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத், செயல் இயக்குனர் டாக்டர் பால் ஹென்றி, மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ், எலும்பியல் துறை தலைமை மருத்துவர் டாக்டர் வெர்னன் லீ, தலைமை இயக்குதல் அலுவலர் சரவணன் ராமன், பொது மேலாளர் நிதின் சம்பத், அபிராமி நிதின் ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS