BREAKING NEWS

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 கூலி தொழிலாளர்கள் வெட்டி கொலை – போலீசார் விசாரணை

கோவில்பட்டி அருகே டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் 2 கூலி தொழிலாளர்கள் வெட்டி கொலை – போலீசார் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காப்புலிங்கம்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன் (50). அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர் மந்திரம் (40) ஆகிய 2 பேரும் நேற்றிரவு தளவாய்புரம் மதுபானம் கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்த போது, இவர்களது உறவினரான அதே ஊரைச் சேர்ந்த கோமு(55) என்பவர் தன்னுடைய மனைவி தங்கத்தாய் பிரிந்து சென்றதற்கு நீங்கள் தான் காரணம் என்று கூறி இருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மேலும் அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் இருவரையும் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். மந்திரம் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மந்திரம் இன்று உயிரிழந்தார்.

இது குறித்து கயத்தாறு போலீஸார் வழக்குப் பதிந்து கோமுவை தேடி வருகின்றனர். தேடப்பட்டு வரும் கோமு ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்து தற்போது விவசாயம் செய்து வந்துள்ளார்.

அடிக்கடி மது அருந்திவிட்டு தனது மனைவி மற்றும் மகன் மாடசாமியிடம் தகராறு செய்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தனது மகனை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.

மேலும் அவரது மனைவியும் தாக்கியுள்ளார். இதனால் அவரது மனைவி மற்றும் மகன் இருவரையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

மேலும் அவரது மனைவி தங்கத்தாய் ஊரைவிட்டு வெளியேறி வெளியூரில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னுடைய மனைவி கோபித்துக் கொண்டு வெளியூர் சென்றதற்கு முருகன் மற்றும் மந்திரம் இருவரும்தான் காரணம் என்று கூறி அடிக்கடி கோமு தகராறு செய்து வந்துள்ளார்.

அது மட்டுமின்றி தன்னுடைய மனைவி இருக்கும் இடத்தை கூறும்படி இருவரிடமும் கேட்டு வந்துள்ளார். இதற்கிடையெல்லாம் நேற்று இரவு இருவரும் மதுபானக்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருப்பதை பார்த்த கோமு என்னுடன் என் மனைவியை வாழ விடாமல் மறைத்து வைத்துவிட்டு நீங்கள் மட்டும் சரக்கடித்து சந்தோசமாக இருக்கலாமா என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரையும் அறிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கோமு,, முருகன் மற்றும் மந்திரத்தை அரிவாளால் வெட்டும் பதபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

CATEGORIES
TAGS