அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டம்! அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

தஞ்சாவூர்,
அண்மை காலமாக தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கபரிவார் அமைப்புகள் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்முறைகளை தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் அதிகமாகி வருகிறது. ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீச்சுகளும் நடைபெற்று கலவர மாயமாகி வருகின்றன.
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் நச்சு அரசியலுக்கு இடம் அளிக்க வேண்டாம் என தமிழக மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தின் அமைதியும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத ரீதியில் மக்களை பிளவுபடுத்தும் சங்கபரிவார் முயற்சிகளை புறக்கணிக்கவும், முறியடிக்கவும் முன்வர வேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி தமிழ்நாட்டில் 50 இடங்களில் அணிவகுப்பு நடத்த போவதாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

இது தமிழ்நாட்டில் மேலும் பதட்டத்தையும், கலவரத்தையும் தூண்டுகின்ற செயலாகும். இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி அமைப்புகள் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த போராட்டத்தில் சமூக நல்லிணத்தை விரும்புகின்ற அனைத்துக் கட்சிகள், ஜனநாயக அமைப்புகள், இயக்கங்கள் அனைவரும் பங்கேற்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த அடிப்படையில் தஞ்சை மாவட்டத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகின்றது.
இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும், உழைக்கின்ற தொழிலாளர்களும், ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டி அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களிடமும், தொழிலாளர்களிடமும் துண்டு பிரசுரம் விநியோகித்து ஆதரவு திரட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்த உத்திராபதி, வடக்கு மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி,
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி ஆகியோர் முன்னிலையில் வகித்தார்கள். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என்.பாலசுப்பிர மணியன், ஜார்ஜ் துரை, தி.திருநாவுக்கரசு வெ.சேவையா, தி.கோவிந்தராஜன், த.கிருஷ்ணன், ஆர்.பி.முத்துக்குமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பி.செந்தில்குமார், ஆர்.மனோகரன், சரவணன், கரிகாலன், கோஸ்கனி,
விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் கோ.ஜெய்சங்கர், தமிழ் முதல்வன், யோகராஜ், தமிழ்ச்செல்வி, சிவதமிழ்நீதி, சுரேஷ் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் ஜெய்னுல் ஆப்தீன், ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை. மதிவாணன், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் கே.அன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர் .
