அரசு ஊழியரை காலில் விழ வைத்த திண்டிவனம் நகர மன்ற தலைவர் நிர்மலா அவர்களின் கணவர் கவுன்சிலர் ரவிச்சந்திரனை வன்மையாக கண்டிக்கிறோம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரியை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்த திமுக நகர மன்ற உறுப்பினர் மற்றும் நகரமன்ற தலைவரின் கணவர்: நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக, அதிமுக, விசிக நகர மன்ற உறுப்பினர்கள் காவல்துறையில் புகார்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி, திண்டிவனம் 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா, அலுவலகப் பணியில் ஈடுபட்டிருந்த முனியப்பனிடம் சென்று தன் வார்டில் நடைபெற்ற பணிக்கான நிதி ஒதுக்குதல் தொடர்பாக கேட்டுள்ளார்.
அதற்கு முனியப்பன் விரைவில் பணம் கிடைக்கும் என பதில் அளித்துள்ளார். அப்போது நகர மன்ற உறுப்பினர் ரம்யா முனியப்பனை தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார்.
மேலும் நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரனிடம் முனியப்பன் தன்னை தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறியுள்ளார். நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில், ஆனையரின் அறைக்கு முனியப்பனை அழைத்த நகர மன்ற தலைவரின் கணவர் ரவிச்சந்திரன் ரம்யாவிடம் மன்னிப்பு கேட்க கூறியுள்ளார்.
முனியப்பன் மன்னித்து விடுங்கள் எனக்கூறியதை ஏற்க மறுத்த ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை முனியப்பன் ஏற்க மறுத்துள்ளார்.
இந்நிலையில் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் உன் மீது புகார் அளித்து வேலையை விட்டு நீக்கி விடுவேன் என ரம்யா மிரட்டியுள்ளார். தொடர்ந்து நகர மன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் வற்புறுத்தியதின் பேரில் நகராட்சி ஊழியர் முனியப்பன் ரம்யா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
இன்று இந்த சம்பவத்தை அறிந்த திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர மன்ற உறுப்பினர்கள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நகராட்சி அதிகாரி முனியப்பனை காலில் விழ வைத்த 20-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரம்யா மற்றும் காலில் விழ வற்புறுத்திய நகரமன்ற தலைவர் நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலும் நகராட்சி ஆணையர் இல்லாத நேரத்தில் அவருடைய அறையை சட்ட விரோதமாக பயன்படுத்தியுள்ளனர்.
என்றும் எனவே நகராட்சி ஆணையர் அலுவலக அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகராட்சி மேலாளர் நெடுமாறன் மற்றும் திண்டிவனம் காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அரசு ஊழியரை திமுக நகர மன்ற உறுப்பினர் காலில் விழ வைத்த சம்பவம் திண்டிவனத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.