BREAKING NEWS

ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது-2 பேர் தப்பி ஓட்டம்

ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக  லாரியில் கடத்தி வரப்பட்ட  128 கிலோ கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது-2 பேர் தப்பி ஓட்டம்

தஞ்சை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கவும், இவைகளை விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று பேராவூரணி அருகே மினிலாரியில் கடத்தப்பட்ட 700 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த சம்பவத்தை தொடர்ந்து தஞ்சையிலும் லாரியில் கடத்தி வரப்பட்ட 128 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை ரெயில்வே குட்செட் எடை மேடை அருகே தெற்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிறிது தூரத்தில் 2 லாரிகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதில் ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு 7 பேர் ஏதோ பொட்டலங்களை இடமாற்றம் செய்ததை போலீசார் பார்த்தனர். சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக அங்கு சென்றனர். இதில் 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து போலீசார் இரண்டு லாரிகளையும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் லாரியில் 128 கிலோ கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இது குறித்து அந்த 5 பேரிடம் போலீசார் நடத்தி விசாரணையில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.


அதில் அவர்கள் திருபுவனம் கீழ சாலையை சேர்ந்த அசாருதீன் (வயது 19), திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த ஆசிப் (25), ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ரங்கா சமுத்திரத்தை சேர்ந்த சதாம் உசேன் (30), உசிலம்பட்டி கீழபுதுரை சேர்ந்த சஞ்சய் (41), ஈரோடு புதுகொத்தை காட்டை சேர்ந்த மாணிக்கராஜ் (37) ஆகிய 5 பேர் என்பதும், இவர்கள் ஆந்திராவில் இருந்து தஞ்சை வழியாக லாரியில் 128 கிலோ கஞ்சா கடத்தி வந்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விற்க முயன்றதும் தெரிய வந்தது.

மேலும் தஞ்சையில் வைத்து ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு கஞ்சா பொட்டலங்களை இடமாற்றம் செய்யும்போது சிக்கி உள்ளனர்.


இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த அசாருதீன், ஆசிப், சதாம் உசேன், சஞ்சய், மாணிக்கராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய இரண்டு பேரை தேடி வருகின்றனர். 2 லாரிகள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )