கஞ்சா வியாபாரிகள் 8 பேர் மீது வழக்கு. 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது. 60 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல். தனிப்படை காவல்துறையினர் நடவடிக்கை.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ராஜா.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அடுத்த பட்டிவீரன்பட்டி அருகே அய்யங்கோட்டை செல்லும் சாலையில் கஞ்சா வியாபாரம் நடைபெறுவதாக நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவல் பேரில் நிலக்கோட்டை துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான சார்பு ஆய்வாளர் தயாநிதி சிறப்பு தனிப் படை குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு சொகுசு இனோவா காரை கவர் போட்டு மறைத்து வைத்து கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இருவர் மட்டும் கஞ்சா பொட்டலங்களை பையில் வைக்கப்பட்டிருப்பதை காவல் துறையினர் பிடித்தனர். மேலும் அவர்களைப் பிடித்து கார் மற்றும் கஞ்சாவை பட்டி வீரன் பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து பட்டிவீரன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்ததில் கடந்த மாதம் கஞ்சா வழக்கில் சோழவந்தனை சேர்ந்த அழகு பாண்டி என்பவரை காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர். அழகு பாண்டி மூலமாக அவருடைய உறவினர் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது.
மேலும் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த சக்திவேல் (23) நிலக்கோட்டை அடுத்த, வீலிநாயக்கன்பட்டி அருகே ஜெய்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த தோட்டா முருகன் சக்சேனா (24) இவர்கள் இருவரும் நிலக்கோட்டையில் உள்ள தனியார் நகைக்கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.
மேலும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட சக்திவேலின் உறவினர்கள் சோழவந்தானைச் சேர்ந்த தனலட்சுமி (50) ராஜாத்தி (58) மற்றொரு பெண் நாகபாண்டி (30) ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் அழகுபாண்டி ஏற்கனவே சிறையில் உள்ளார்.
மேலும் தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு சொகுசு கார் இனோவா கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஐந்து பேரையும் கைது செய்து நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
பட்டிவீரன்பட்டி அருகே கஞ்சா வழக்கில் 3 பெண்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.