குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை முடிந்து சம்பா தாளடி நடவு பணிகள் இறுதி கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பூதலூர் திருக்காட்டுப்பள்ளி தாலுகாக்களில் குறுவை அறுவடை முடிந்த வயல்கள் தற்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது.
இந்த வயல்களில் பெரிதும், சிறியதுமாக ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய விடப்பட்டடுள்ளது. இந்த வாத்துகளுக்கு ஒரே இடத்தில் வைத்து தீவனம் இடுவது என்பது பெரிய அளவில் செலவை ஏற்படுத்தும் என்பதால் அறுவடை முடிந்த வயல்களில் சிதறிய நெல்மணிகள், புழுக்கள், பூச்சிகள் வாத்துக்களுக்கு நல்ல இரையாக அமையும்.
இதற்காக வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான வாத்துகள் மேய்ச்சலுக்காக வந்துள்ளன. ஆந்திரா, வேலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கான வாத்துகளுடன் மேய்ச்சலுக்காக தஞ்சை பகுதிக்கு வந்துள்ளனர்.
தஞ்சை அருகே உள்ள மேல உள்ளூர் பகுதியில் அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகளை மேய விட்டுள்ளனர். இந்த நிலத்தில் வாத்துக்கு தேவையான தண்ணீர், நெல், பூச்சின்னு அனைத்தும் இருக்கும். வாத்துகள் மேய்வதால் அதன் எச்சங்கள் வயலுக்கு இயற்கை உரமாக அமையும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
