கேரள பஸ்சில் கொண்டு சென்ற ரூ.27 லட்சம் சிக்கியது; ஹவாலா பணமா? போலீசார் விசாரணை: தமிழக வாலிபர் கைது!

தமிழகத்தில் இருந்து தென்காசி, செங்கோட்டை வழியாக கேரளாவுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதேபோல் கேரளாவில் இருந்தும் வாகனங்கள் தென்காசிக்கு வருகின்றன.
இவ்வாறு செல்லும் அனைத்து வாகனங்களும் செங்கோட்டை அருகே உள்ள புளியரை மற்றும் கேரளாவில் உள்ள ஆரியங்காவு சோதனை சாவடிகளில் நிறுத்தப்பட்டு தீவிர சோதனை செய்யப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ஆரியங்காவில், மதுவிலக்கு பிரிவு போலீசார் சோதனை சாவடியில் வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது தென்காசி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு கேரள மாநில அரசு பஸ் புறப்பட்டு வந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி உள்ளே சென்று சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்தின்பேரில் ஒரு வாலிபரின் கைப்பையை சோதனை செய்தனர். அதில் ஒரு பேப்பரில் சுற்றப்பட்ட கட்டு இருந்தது. அதனை போலீசார் பிரித்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். அந்த பேப்பருக்குள் 500 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன.
இதையடுத்து போலீசார், அந்த பணத்தை எண்ணிப்பார்த்தனர். அதில் மொத்தம் ரூ.27 லட்சம் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து பணம் கொண்டு வந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர், தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த முகம்மது அக்ரம் (வயது 27) என்பது தெரியவந்தது. அவரிடம் பணம் குறித்து விசாரணை நடத்தியபோது, தங்க நகை வாங்குவதற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் ரூ.27 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்து, முகம்மது அக்ரமை கைது செய்தனர்.
பின்னர் அவரையும், பணத்தையும் மதுவிலக்கு போலீசார், தென்மலை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், ஆவணங்கள் எதுவும் இல்லாததால் இது ஹவாலா பணமா? என்பது குறித்து போலீசார் தீவர விசாரண நடத்தி வருகிறார்கள்.
