சங்கரன்கோவிலில் மது பாட்டில்கள் ஏற்றி சென்ற டாஸ்மாக் லாரி மணலுக்குள் புதைந்ததால் 2மணி நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதையொட்டி குடிநீர் பகிர்மான குழாய்கள் அமைக்கும் பணியும் நடந்தது. பின்னர் அந்த இடத்தில் பணிகள் முடிந்து மணலால் மூடப்பட்டது.

இந்நிலையில் நெல்லையில் இருந்து இன்று மதியம் சங்கரன்கோவில் வழியாக புளியங்குடி சென்ற டாஸ்மாக் லாரி தெற்கு ரத வீதியும், மேலரதவீதியும் சந்திக்கும் வளைவில் திரும்பும்போது குடிநீர் குழாய் பதித்து மூடப்பட்டிருந்த மணலுக்குள் புதைந்தது. லாரியை எடுக்க ஓட்டுனர் பலமுறை முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை இதனால் லாரியில் இருந்த மது பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டது.

பின்னர் ஜெசிபி இயந்திரம் மூலம் மணலுக்குள் சிக்கியிருந்த லாரி ( சரக்கு ) 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது. இதனால் தெற்குரத வீதிப் பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
