சிறுதானியங்களை சாப்பிட்டால் மாரடைப்பு வராது! கலெக்டர் அட்வைஸ்!
வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி மற்றும் கருத்தரங்கு. மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமிய மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் உயர்தர சிறுதானிய உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கருத்தரங்கு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன் தொடக்கி வைத்தார். ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, வேளாண்மை இணை இயக்குனர் ஏ.பாலா முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் பேசுகையில், தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதற்கு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. வேளாண்மை துறைக்கென தனி பட்ஜெட்டை தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.
கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரண பொருட்கள் வழங்கப்படுகிறது.
இயற்கை விவசாயம் செய்வது, அனைவரும் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்கிற நோக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான கேழ்வரகு, கம்பு, சோளம், திணை, குதிரைவாலி மற்றும் பல்வேறு வகையான பழங்கால நெல் ரகங்களை பயிரிட்டு சமுதாயத்திற்கும் சமுதாய முன்னேற்றத்திற்கும் அனைவரும் பாடுபட வேண்டும்.சிறு தானிய உணவு வகைகளை தொடர்ந்து உண்டு வந்தால் மாரடைப்பு போன்ற நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும்.
விவசாயிகள் இயற்கை உரங்களான எரு, தலை சத்துக்களை பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும். அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களை நிலத்தில் போடுவதன் மூலம் மண் மலட்டுத்தன்மை அடைகிறது, மனிதர்களுக்கு எப்படி உயிர் உள்ளதோ அதை போல மண்ணிற்கும் உயிர் உள்ளது.
அளவுக்கு அதிகமான ரசாயன கலவைகள் தேவையில்லாத பூச்சிக்கொல்லி மருந்துகளை அடிப்பதன் மூலம் மண்ணின் தன்மை மாறிவிடுகிறது. அதனால் எந்த பயிர் செய்தாலும் போதிய வருவாய் கிடைப்பதில்லை. ஆகவே விவசாயிகள் இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி விவசாயம் செய்ய வேண்டும்.
இந்த கருத்தரங்கத்தில் வேளாண் விஞ்ஞானிகள், வேளாண்மை துறை பேராசிரியர்கள் சொல்லுகின்ற கருத்தைக் கேட்டு நல்ல முறையில் விவசாயம் செய்து வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெற வேண்டும் என்றார்.
முன்னதாக வேளாண்மை துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை திறந்து வைத்து, ஒவ்வொரு அரங்கமாக பார்வையிட்டு அந்த வேளாண் உபகரணங்கள்குறித்த பயன்பாடுகளையும், பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஏர் கலப்பை போன்ற உபகரணங்களையும் பார்வையிட்டு, சிறு தானியம் மூலம் செய்யப்பட்ட உணவு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு, அதனுடைய நன்மைகளை குறித்து கேட்டறிந்தார்.
இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கிருஷ்ணகிரி அதியமான் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாலாறு வேளாண்மை கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்களும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் ஆர்.ஜே.சுரேஷ்குமார்.