சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை எதிரொலி… தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு!!
16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யபட்டதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.
16 வயது சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யபட்டதன் எதிரொலியாக, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர். ஈரோட்டை சேர்ந்த 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, சிறுமியின் கருமுட்டைகளை, இடைத்தரகர்கள் மூலமாக ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு தனியார் மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அவரது இரண்டாவது கணவர் மற்றும் புரோக்கராக செயல்பட்ட மாலதி ஆகிய மூவரை கைது செய்துள்ள ஈரோடு தெற்கு பிரிவு போலீசார், சிறுமியின் பெயர் , வயதினை ஆதார் உள்ளிட்ட ஆவணங்களில் திருத்தி, போலி ஆவணங்கள தயாரித்து கொடுத்த ஜான் என்பவரையும் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பத்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை காப்பகம் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். இந்த நிலையில் காப்பகத்தில் உள்ள சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில், சிறுமியின் கருமுட்டைகள் 8 முறை எடுக்கப்பட்டு தனியார் மருத்துவமனை மூலமாக விற்பனை செய்யப்பட்டதும், சிறுமியின் வளர்ப்பு தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சி தகவலும் வெளியானது.
இதனிடையே கரு முட்டை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக ஈரோட்டில் தனியார் மருத்துவமனைகளில் சென்னை மருத்துவ குழுவினர் விசாரித்தனர். இதேபோல் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பிருந்தாவன் சாலையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு இன்று பகல் 3 மணி அளவில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் விஸ்வநாதன் தலைமையில் ஒரு காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் சென்று, தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவத்தின் எதிரொலியாக இதேபோல் வேறு எதேனும் சிறுமிகளிடம் இவ்வாறு கருமுட்டை பெறப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்த மருத்துவ துறையினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மருத்துவத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தி வருகின்றனர்.