சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.
![சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை. சோளிங்கர் அருகே விவசாய நிலத்திலிருந்து வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் மின் கம்பி உரசி தீ விபத்து. படுகாயமடைந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/04/WhatsApp-Image-2023-04-26-at-18.17.53-1.jpeg)
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரது நிலத்தில் நெல் அறுவடைமுடிந்து, வைக்கோல்களை சேகரித்து வைத்திருந்தார். இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (54) என்பவர் தனது டிராக்டரில் வைக்கோலை ஏற்றிக்கொண்டு சென்றார்.
வயலில் சிறிது தூரம் சென்றபோது தாழ்வாக இருந்த மின்கம்பி வைக்கோல் மீது உரசி தீ பிடித்ததை கவனிக்காமல் ராஜேந்திரன் டிராக்டரை ஓட்டிச்சென்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் டிராக்டரை நிறுத்துமாறு கூச்சலிட்டனர. இதையடுத்து டிராக்டரை உடனடியாக நிறுத்தப்பட்டது.
பின்னர், வாகனத்தின் இஞ்சினை பின்பக்கம் உள்ள டிரெய்லரிடமிருந்து பிரித்து அங்கிருந்து அவசர அவசரமாக கொண்டு செல்ல முயன்றபோது தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த வைக்கோல் கட்டுகள் சரிந்து ராஜேந்திரன் மீது விழுந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற சோளிங்கர் தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதற்கிடையே சோளிங்கர் அரசு மருத்துவமனையில் ராஜேந்திரனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து கொண்ட பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.