BREAKING NEWS

தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது

தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார் கையும் கலுவுமாக கைது

“தடையில்லா சான்று வழங்க ரூ.5,000 லஞ்சம் நில எடுப்பு தனி தாசில்தார், அவரது வாகன ஓட்டுனருடன் விஜிலென்ஸ் போலீசார் கையில் சிக்கி கைதாகியுள்ளனர்!

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி ஊராட்சி மூலப்பாதை பகுதியைச் சேர்ந்த 55 வயதாகும் தமிழரசன் என்ற விவசாயி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

விவசாயி தமிழரசனுக்கு சொந்தமான விவசாய நிலம் இருக்கிறது. அந்த நிலம் கொங்கணாபுரம் பகுதியில் தற்போது புதிதாக அமைக்கப்பட்டு வரும் திருச்செங்கோடு-ஓமலூர் இடையிலான 4 வழிச்சாலை அருகே இருக்கிறது.

விவசாயி தமிழரசன் தனது விவசாய நிலத்தின் பேரில் வங்கி கடன் பெறுவதற்கு விரும்பியுள்ளார். அதற்கு பொதுவாக தடையில்லா சான்றிதழ் அரசிடம் வாங்க வேண்டும்.

அந்த தடையில்லா சான்று கேட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 4 வழிச்சாலைக்கான நில எடுப்பு அலுவலக தனி தாசில்தார் கோவிந்தராஜ் (வயது 47) என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார்.

அங்கு தாசில்தார் கோவிந்தராஜ் தடையில்லா சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவ்வளவு பணம் தர வாய்ப்பு இல்லை என்று விவசாயி தமிழரசன் கூறினாராம். இறுதியாக ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்றும் மேலும் லஞ்சப் பணத்தை வாகன ஓட்டுனரான வெங்கடாஜலம் (வயது 50) என்பவரிடம் கொடுக்க வேண்டும் என்று தாசில்தார் கூறினாராம்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி தமிழரசன் இதுகுறித்து சேலம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையம் சென்றார் இங்கு நடந்த விவரங்களை கூறி விவசாயி தமிழரசன் தாசில்தார் மீது, காவல் ஆய்வாளர் நல்லம்மாளிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து வழக்கமான நடைமுறைப்படி, ரசாயன பவுடர் தடவிய ரூ.5 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை புகார்தரரான தமிழரசனிடம் கொடுத்து அனுப்பினர்.

பணத்தை பெற்றுக்கொண்ட விவசாயி தமிழரசன், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த தாசில்தாரின் வாகன ஓட்டுனர் வெங்கடாஜலத்திடம் ரூ.5 ஆயிரம் ரசாயன பொடி கலவப்பட்ட ரூபாய் நோட்டுக்களை கொடுத்தார்.

அப்போது அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் நல்லம்மாள் தலைமையிலான போலீசார், நில எடுப்பு தனி தாசில்தார் கோவிந்தராஜி, அவரது வாகன ஓட்டுநர் வெங்கடாஜலத்தின் கைரேகை பதிந்த லஞ்சப் பணத்துடன் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

பின்னர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நிலம் எடுப்பு அலுவலகத்தில் இருந்த பணியிலிருந்த தாசில்தார் கோவிந்தராஜையும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பின்னர் 2 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
TAGS