தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை.

தஞ்சை அருகே குடிபோதையில் தாயிடம் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த மகன், தந்தையை குழவிக்கல்லை தலையில் போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அருகே சூரக்கோட்டை அம்மா குளம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன தம்பி (55). கூலி தொழிலாளி. இவரது மனைவி அமுதா. இவர்களின் மகன் சின்னத்துரை (24). கரூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
சின்னதம்பி வேலை செய்து கிடைக்கும் பணத்தில் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தொடர்ந்து தகராறு செய்து வந்துள்ளார்.
மேலும் வீட்டு செலவிற்கும் பணம் கொடுப்பதில்லையாம். இதனால் அடிக்கடி கணவன், மனைவியை இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தகராறின் போது சின்னதம்பி மனைவியை அடித்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கரூரிலிருந்து ஊருக்கு சின்னத்துரை வந்துள்ளார். அப்போதும் சின்னத்தம்பி தன் மனைவியிடம் குடிபோதையில் தகராறு செய்துள்ளார். இதை சின்னத்துரை கண்டித்துள்ளார்.
இருப்பினும் நேற்று மீண்டும் குடித்து விட்டு வந்து வீட்டில் சின்னத்தம்பி தகராறு செய்யவே சின்னத்துரை ஆத்திரமடைந்துள்ளார். இதனால் தந்தை, மகனுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தந்தை இப்படி தொடர்ந்து குடிப்பதும், தகராறு செய்வதுமாக இருப்பதால் ஆத்திரமடைந்த மகன் சின்னதுரை இன்று அதிகாலையில் வீட்டின் முன் பகுதியில் தூங்கிகொண்டிருந்த தனது தந்தையை குழவிக்கல்லை எடுத்து வந்து தலையில் போட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த சின்னத்தம்பி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னத்தம்பி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சின்னத்துரையை கைது செய்தனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.