BREAKING NEWS

‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’ – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி

‘’திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்துப் பழக்கமே இல்லை…’’  – ஸ்டாலினுக்கு இபிஎஸ் சவுக்கடி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆம்பூரில் எழுச்சிப்பயணத்தை முடித்துவிட்டு குடியாத்தம் தொகுதிக்குப் பயணமானார். எடப்பாடியாரை வரவேற்கும் வகையில் புலியாட்டம், சிலம்பாட்டம், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் வழியெங்கும் களை கட்டின. மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த எடப்பாடியார், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்.எஸ்.சாலையில் எழுச்சி உரையாற்றினார்.

“எழுச்சி பயணத்திலேயே எழுச்சியாக குடியாத்தம் நகரமே மக்கள் கூட்டத்தில் குலுங்குகிறது. அடுத்தாண்டு தேர்தலில் அதிமுக வெற்றிக்கு இங்கு குழுமியிருக்கும் மக்களே சாட்சி. சுதந்திர இந்தியாவின் முதலில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி இந்த குடியாத்தம் தொகுதியில் நெய்து கொடுக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது.

இங்கு விவசாயம், நெசவு, தீப்பெட்டி, பீடி ஆகிய தொழிலை நம்பித்தான் மக்கள் உள்ளனர். இந்த தொழில்கள் எல்லாம் அதிமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி செய்யப்பட்டது, மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது, குடிமராமத்து திட்டம் கொடுக்கப்பட்டது, இயற்கைச் சீற்றங்களில் இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தோம், விவசாயத் தொழிலாளிகளுக்க்கு பசுமை வீடுகள், ஆடு, மாடு, கோழி, முதியோர் உதவி தொகை என ஏராளமான உதவிகள் செய்தோம்.

கைத்தறி நிறைந்திருக்கிறது. இங்கிருந்து லுங்கிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு பல திட்டங்கள் கொடுத்தோம், 200 யூனிட் கைத்தறிக்கும், விசைத்தறிக்கு 700 யூனிட்டும் மானியம் கொடுத்தோம், பசுமை வீடுகள், கைத்தறி ஆதரவு திட்டம் கொடுத்தோம். 120 கோடி ரூபாய் மானியம் கொடுத்தோம். கைத்தறி துணி தேங்கியிருந்த காலத்தில் மானியம் 300 கோடி ரூபாய்க்குக் கொடுத்தோம். நூலின் விலையை ஸ்திரப்படுத்த நிதி உதவி செய்தோம், ஜவுளி கைத்தறி விற்பனையைப் பெருக்க 2019ல் ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை, ஜவுளி பன்னாட்டுக் கண்காட்சி கோவையில் நடத்தினோம். சிறிய அளவு ஜவுளி பூங்கா கொண்டுவந்தோம்.

இன்றைய திமுக அரசில் கூட்டுறவு சங்க கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி 15 நாட்களுக்கு ஒரு முறையே கிடைக்கிறது. மீண்டும் அதிமுக வந்ததும் அன்றாடம் நெசவாளர்களுக்கு கூலி பட்டுவாடா செய்யப்படும்.

விலைவாசி விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டது. விலைவாசி கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கலை. அதிமுக ஆட்சியில் விலையைக் கட்டுப்படுத்த, எங்கு குறைந்த விலைக்குக் கிடைக்கிறதோ அங்கிருந்து கொள்முதல் செய்து விலைவாசியைக் கட்டுப்படுத்தினோம். ஏழைகள் பாதிக்கப்படும் நேரெமெல்லாம் காப்பாற்றியது அதிமுக அரசு. தீப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு 18% இருந்து 12% ஆக ஜிஎஸ்டி கவுன்சிலில் பேசி குறைத்துக் கொடுத்தோம். தீக்குச்சி மரம் இறக்குமதி செய்ய 5% வரி ரத்து செய்து கொடுத்தோம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்க 7.5% உள் இடஒதுக்கீடு கொண்டுவந்தோம். அதில், 2,818 பேர் இலவசமாகப் படித்து மருத்துவர் ஆகிவிட்டனர். இப்படி ஒரு திட்டமாவது திமுக ஆட்சியில் இருக்கிறதா? கேட்டால், உரிமைத் தொகை கொடுத்தோம் என்பார் ஸ்டாலின். அவராகக் கொடுக்கவில்லை. 28 மாதம் கொடுக்கவில்லை. அதிமுக தான் போராடி வாங்கிக்கொடுத்தது. இப்போது தேர்தல் வர இருப்பதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை கொடுப்பதாக அறிவித்திருக்கிறார். பெண்களின் கஷ்டத்தை பார்த்துக் கொடுக்கவில்லை, அதிமுக அழுத்தத்தைப் பார்த்தும், தேர்தல் காரணமாகவும் கொடுக்கிறார்.

மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் செல்வாக்கை இழுந்துவிட்டார். ஏற்கெனவே 28 மாதம் வழங்கவில்லை, இன்னும் 8 மாதம் தான் இருக்கிறது. இந்நிலையில் மக்களை ஏமாற்ற தந்திரமாக திமுக அரசு செயல்படுகிறது. திமுகவுக்கு வாங்கித்தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை.

கொரோனா காலம் சோதனையான நேரம், வருமானம் இல்லை அப்போது கூட விலைவாசி உயரவில்லை. பல உயிர்களைக் காப்பாற்றினோம். பிரதமர் மோடியே பாராட்டியிருந்தார். அப்படி திறமையாக ஆட்சி செய்தோம். ஓராண்டு விலையில்லா பொருட்கள் ரேஷனில் கொடுத்தோம். மூன்றுவேளை உணவு கொடுத்தோம்.

ஆனால், 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்று ஸ்டாலின் சொல்கிறார். திமுக ஆட்சியில்தான் ஒன்றுமே இல்லை. நிறைய அறிவிப்புகள் கொடுத்தார், நிபுணர் குழு அமைத்தார், கடன் வாங்குவதைக் குறைக்க குழு அமைத்தார். ஆனால், அதிகம் கடன் வாங்கியிருக்கிறார். 5 ஆண்டில் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். நாமே அந்தக் கடனை கட்ட வேண்டும். 73 ஆண்டு கால தமிழக ஆட்சி வரலாற்றில் இருந்த கடனை விட திமுக அரசின் கடன் சுமை அதிகம். எப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை.

ஒரு பக்கம் கடன், இன்னொரு பக்கம் டாஸ்மாக், பத்திரபதிவு உள்ளிட்டவற்றில் வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால் எந்த புதிய திட்டம் கொடுக்கவில்லை. பொம்மை முதல்வர் ஒரு திட்டம் அறிவிப்பார், பெயர் வைப்பார், இப்படியே நான்காண்டுகள் ஓட்டிவிட்டார்.

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி 11.19% என்கிறார். இந்த புள்ளிவிபரம் மாறி மாறி வரும், விவசாயம், தொழில், சேவை ஆகிய மூன்றையும் வைத்துத்தான் நிர்ணயம் செய்வார்கள். இங்கு யாருக்காவது தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறதா..? இந்த உண்மையைச் சொன்னால் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதாகச் சொல்கிறார். மின்கட்டணம், வரி எல்லாம் உயர்ந்துவிட்டது.

திமுக 525 அறிவிப்புகள் கொடுத்தது. 100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்துவேன் என்றார், உயர்த்தவில்லை. சம்பளமும் உயர்த்தவில்லை. சம்பளத்தையே எதிர்க்கட்சியான அதிமுக தான் வாங்கிகொடுத்தது. ஆட்சி செய்வது திமுக, நிதி வாங்கிக் கொடுத்தது அதிமுக.

ஏழை நெசவாளர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளிதோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும். இப்போது உங்களுடன் ஸ்டாலின் என்று திட்டம் தொடங்கி இருக்கிறார், மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதை முதல்வரே ஒப்புக்கொண்டுள்ளார். மனு கொடுத்தால் 45 நாளில் தீர்த்துவைப்பாராம், இதை நம்ப முடியுமா? இன்னும் 8 மாதம் தான் இருக்கிறது. அதற்குள் எப்படி தீர்க்க முடியும். இங்கு அதிகாரிகிட்ட வெட்டுனாதான் வேலை ஆகுது, பணம் கொடுக்காமல் வேலை நடக்குமா?

இதேபோல்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும்போது புகார் பெட்டி திட்டம் கொண்டுவந்து மனுவை வாங்கினார், ஆட்சிக்கு வந்து தீர்ப்பேன் என்று சொன்னார், அப்புறம் எதுக்கு இந்த திட்டம்? ஏற்கனவே மனு கொடுத்தார்களே, அது என்ன ஆனது என்று மக்கள் கேட்கிறார்கள். எப்படியோ, மக்களை ஏமாற்றுவதில் திமுக கைதேர்ந்தவர்கள். காலம் போன கடைசியில், வெண்டிலேட்டரில் திமுக ஆட்சி இருக்கிறது. மக்கள் கைவிட்டால் திமுக ஆட்சி குளோஸ்.

அதிமுக ஆட்சியில் நிறைய திட்டங்கள் நிறைவேற்றி தேசிய விருதுகள் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலும், ஊழல் செய்வதில் முதல் மாநிலம் தமிழ்நாடு என்றுதான் திமுக பெயர் பெற்றுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் முக்கியமான தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். கருணாநிதி குடும்பத்தினர் தான் ஆட்சியிலும், கட்சியிலும் பதவிக்கு வர முடியும். அது கட்சியல்ல, கார்ப்பரேட் கம்பெனி, செல்வாக்கை இழந்ததால் வீடுவீடாகப் போய் உறுப்பினர் சேர்க்குறாங்க. உறுப்பினர் சேர்க்கவே பிச்சை எடுக்கும் ஆட்சி தொடர வேண்டுமா? வரும் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வையுங்கள்…’’ என்றார்.

CATEGORIES
TAGS